லலித் அதுலத் முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்திற்காக நிதி திரட்டும் ஆன்லைன் அதிர்ஷ்ட லாபச்சீட்டு (Lottery) கொள்முதல் நடவடிக்கையில் ஊழல் புரிந்த குற்றச்சாட்டில், வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட மூன்று உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாபொல நிதியத்திற்காக ஆன்லைன் லொத்தர் முறையை ஆரம்பிக்க நடத்தப்பட்ட கொள்முதல் நடவடிக்கையின் போது, வெற்றிகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளருக்கு விலைமனுவை வழங்காமல் அரசாங்கத்திற்கும் அந்த நிறுவனத்திற்கும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மீண்டும் விலைமனுக்களைக் கோரிய போது, ஏற்கனவே முதல் ஏலத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றுமொரு தரப்பிடம் இருந்து 1,000,000/- ரூபா இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக் கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் பின்வரும் அதிகாரிகள் 24.02.2026 அன்று காலை கைது செய்யப்பட்டனர்:
ஏ.எம். பிரியங்கா மத்தும பண்டார அத்தப்பத்து – வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் (காலை 10.05 மணிக்கு கைது).
துரைசாமி ஜீவானந்தம் – முன்னாள் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) (காலை 10.20 மணிக்கு கைது).
கலுதேவ அரவிந்த பிரியதர்ஷனி டி சில்வா – பிரதம நிதி அதிகாரி (காலை 10.30 மணிக்கு கைது).
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
