பிஸ்கட் வாங்குவதற்காக கடைக்குச் சென்ற ஐந்து வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாதம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பயைச் சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, சந்தேகநபருக்குச் சொந்தமான கடைக்கு பிஸ்கட் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். இதன்போது, அச்சிறுமியைக் கடைக்குள் அழைத்துச் சென்று குறித்த வர்த்தகர் பாலியல் தொல்லை இழைத்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரால் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்து உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபரான வர்த்தகரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 65 வயதுடைய சந்தேகநபரை சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாதம்பே பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
