பொருளாதார கண்காணிப்புக் குழு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பது மற்றும் மக்களின் நலனை உறுதி செய்வது குறித்து ஆராயும் வகையில், “பொருளாதார கண்காணிப்புக் குழு” நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்துத் தடைகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைக் குறைப்பது குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
இந்நாட்டு சந்தை நிலவரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், கடந்த குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் எனப் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலதிக விபரங்களுக்கு:
திகதி: 2026-03-13
மூலம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு
