தேவேந்திரமுனைக்குத் தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 123 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் உள்நாட்டு மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையின் நீண்டதூர கண்காணிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், போதைப்பொருளைக் கடத்திச் சென்ற 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட அளவு: 123 கிலோகிராம் ஹெரோயின்.
சந்தைப் பெறுமதி: சுமார் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம்.
கைதானவர்கள்: 5 சந்தேகநபர்கள் (உள்நாட்டு மீனவர்கள்).
நேற்று (15) ஆழ்கடலில் வைத்துப் பாரிய உரமூடைகளுடன் குறித்த படகு கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று (16) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விரிவான சோதனைகளின் போதே, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
