ஏப்ரல் 1 முதல் மின்சாரக் கட்டணம் அதிரடியாக உயர்வு! – முழுமையான விபரங்கள் இதோ
கொழும்பு: 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இந்த புதிய கட்டணத் திருத்தம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் 13.56% கட்டண உயர் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுகர்வோரின் நிலையை கருத்திற்கொண்டு அலகுகளின் அடிப்படையில் கட்டண உயர்வை அனுமதித்துள்ளது.
அலகுகளின் அடிப்படையில் கட்டண உயர்வு விபரங்கள்:
மின்சார நுகர்வு அலகுகளுக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டுள்ள சதவீதங்கள் மற்றும் மாதாந்த மேலதிக கட்டண விபரங்கள் வருமாறு:
0 – 30 அலகுகள்: 4.3% அதிகரிப்பு (மாதாந்தம் 15 ரூபாய் கூடும்)
31 – 60 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தம் 45 ரூபாய் கூடும்)
61 – 90 அலகுகள்: 6.9% அதிகரிப்பு (மாதாந்தம் 120 ரூபாய் கூடும்)
91 – 120 அலகுகள்: 7.1% அதிகரிப்பு (மாதாந்தம் 420 ரூபாய் கூடும்)
180 அலகுகளுக்கு மேல்: அதிகபட்சமாக 25% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சலுகை
மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு இந்த கட்டண உயர்வில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன:
180 அலகுகளுக்குக் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.
180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மாத்திரம் 9.6% கட்டண உயர்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் மின் உற்பத்தி செலவுகளை ஈடுசெய்யும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
