கொழும்பு: பாராளுமன்றில் பெண் உறுப்பினர்களை அவமதிக்கும் வகையிலும், கீழ்த்தரமான முறையிலும் உரையாற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடத்தைகள் குறித்து விசாரணை நடத்தி, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றில் வலியுறுத்தினார்.
சபையில் ஏற்பட்ட மோதல்: வியாழக்கிழமை (09) பாராளுமன்றில் முப்படைச் சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் அவசரகாலச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதியமைச்சர் சுனில் வட்டகல, எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆளுங்கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவரை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தினார். “கடந்த பாராளுமன்றத்தில் தனது பதவியைப் பணத்திற்காக விற்பனை செய்தவரே இவ்வாறு பேசுகிறார்” என அவர் சாடினார்.
ஒழுங்குப் பிரச்சினை: இந்த மோதலின் போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சபையில் இரு தரப்பினரும் கண்ணியமாகச் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சி உறுப்பினர் தவறாகப் பேசினார் என்பதற்காக, பிரதியமைச்சரும் சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்றும், அத்தகைய வார்த்தைகளை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சபை முதல்வரின் கடும் கண்டனம்: இதனைத் தொடர்ந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க,
“எதிர்க்கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் காட்டுமிராண்டித்தனமாகவும், கேவலமாகவும் நடந்துகொள்கிறார்கள். குறிப்பாக பெண் உறுப்பினர்களைக் குறிவைத்து இழிவுபடுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது குறித்து முறையாக விசாரணை நடத்தி, நிலையியல் கட்டளைகளுக்கு இணங்க அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
சபாநாயகரின் கவனத்திற்கு: சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, விவாதத்தின் போது பயன்படுத்தப்பட்ட சபைக்குப் பொருத்தமற்ற வார்த்தைகள் அனைத்தும் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், உறுப்பினர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற நடத்தைகள் குறித்து சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
