மடுல்சீமை, ஏப். 09 – சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மடுல்சீமை நகரில் உள்ள உணவுப் பொருட்கள் விற்பனை கடைகள் மற்றும் உணவகங்களில் இன்று (09) பொது சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது, நகரிலுள்ள அனைத்து உணவுப் பயன்பாட்டு நிறுவனங்களும் பரிசோதிக்கப்பட்டதுடன், மனிதர் பயன்பாட்டிற்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் இனங்காணப்பட்டு உடனடியாக அகற்றப்பட்டன.
மொத்தமாக பரிசோதிக்கப்பட்ட 23 உணவு விற்பனை நிலையங்களில், சுகாதார விதிமுறைகளுக்கு முரணான தரக்குறைவான நிலைமையில்
காணப்பட்ட 02 விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரண்டு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது.
இது தொடர்பாக பசறை பொதுச் சுகாதார தலைமைப் பரிசோதகர் எம்.எச்.எம். நலிம் தெரிவிக்கையில், பொது மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறினார்.
இச்சோதனை நடவடிக்கைகளில் மடுல்சீமை, மெடிகஹத்தென்ன பகுதிகளின் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் லுணுகல பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பங்கேற்றனர்.
— நடராஜா மலர்வேந்தன்
