முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர, கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிப்பு.
நுவரெலியாவில் நபரொருவருக்கு துப்பாக்கி முனையில் உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக, நுவரெலியா காவல்துறையினரால் (21) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர, (22) புதன்கிழமை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி புஷ்பிக ஜெயதாச முன்பும் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபருக்கு ரூ. 10 லட்சம் தனிநபர் பிணையும், ரூ. 25,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவையும் பிறப்பித்தார்.
முன்வைக்கப்பட்ட அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை பிணையில் விடுவித்து உத்தரவிட்டதுடன் இந்த வழக்கு செப்டம்பர் மாதம் (14)
ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் அறிவித்தார் அதுவரை துப்பாக்கியை வழக்குப் பொருளாக நீதிமன்றக் காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் அத்துடன் சந்தேக நபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் அவர் உத்தரவிட்டார்.
ஒருவரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி மிரட்டுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், திருத்தப்பட்ட 1996ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 486ஆம் பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கை தாக்கல் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டது .
சந்தேக நபருக்காக ஆஜரான வழக்கறிஞர்களான திரு. சந்தனம் விஸ்வானி, திரு. தர்ஷனி நனயக்கரா மற்றும் சிரேஷ்ட வழக்கறிஞர் சுரேஷ் கயன் ஆகியோர், சந்தேக நபர் அத்தகைய குற்றச் செயல் எதையும் செய்யவில்லை என்றும், அதன்படி, சந்தேக நபரை பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
புகார்தாரர் சார்பில் ஆஜரான நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் தலைமை ஆய்வாளர் பி.எஸ்.சி. சஞ்சீவ மற்றும் நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதம ஆய்வாளர் ரவீந்திர பிரேமலால், புகார் மீதான விசாரணை இன்னும் நிறைவடையாததால், சந்தேக நபருக்குப் பிணை வழங்குவதை எதிர்ப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர் .
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, புகார்தாரருக்கோ அல்லது சாட்சிகளுக்கோ ஏதேனும் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால், பிணை நிபந்தனைகள் ரத்து செய்யப்பட்டு, சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று பகிரங்கமாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
