சக மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்துப் பகிர்ந்த குற்றச்சாட்டில், உடுத்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் அண்மையில் சாதாரண தரப் பரீட்சை (O/L) எழுதி முடித்த ஆறு மாணவர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் சாதாரண புகைப்படங்களைச் சேகரித்து, ‘AI’ தொழில்நுட்பம் மூலம் அவற்றை ஆபாசமான முறையில் மாற்றியமைத்துள்ளனர்.
இவ்வாறு மாற்றப்பட்ட படங்களைச் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பகிர்ந்து வந்துள்ளனர். இது குறித்துத் தெரியவந்ததையடுத்து, பாடசாலை அதிபர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு:
முறைப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், முதற்கட்டமாக 17 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான் பொன்னுத்துரை கிருஷாந்தன், குறித்த மூன்று மாணவர்களையும் இன்று புதன்கிழமை (29) வரை அச்சுவேலி பகுதியில் உள்ள ‘சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில்’ (தடுப்புக்காவல் இல்லம்) தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகள்:
இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூன்று மாணவர்களையும் கைது செய்ய வேண்டியுள்ளதாகப் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். தலைமறைவாகியுள்ள அந்த மாணவர்களைக் கைது செய்ய மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
#AI_Abuse #JaffnaNews #Maruthankeni #StudentArrest #CyberCrime #SriLankaNews #SchoolSafety #TechnologyMisuse #BreakingNews
