நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதை புனரமைப்பு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மோசமான நிலையை சுட்டிக்காட்டி, அப்பகுதி மக்கள் இன்று நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை (04) முன்னெடுத்தனர்.
பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சேதமடைந்துள்ள இப்பாதை காரணமாக, போக்குவரத்து சிரமங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதுடன், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் தினசரி பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் பாதை மேலும் சேதமடைந்து, பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறிவிடுகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனால் அவசர சேவைகள் கூட தாமதமடைவதாகவும், பொருட்கள் கடத்தலும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையை விரைவாக புனரமைத்து மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இவ்வார்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து சில நேரம் ஸ்தம்பிதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
(நடராஜா மலர்வேந்தன்)
பசறை நிருபர்
