அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டம் நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படைக் கொள்கைகளைச் சுற்றியே கட்டியெழுப்பப்பட்டுள்ளது
இந்த டிஜிட்டல் ஒத்துழைப்பு நாம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைப் பெற்றுத்தரும்
– பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் “பணம் அனுப்புவதற்கு மாத்திரம்” (Send Only) வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வரையறை காரணமாக, இலங்கையின் சுயாதீன தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங்கள் பெரும் தடைகளை எதிர்கொண்டிருந்தன. இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், இணையவழி ஊடாகச் சேவைகளை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் தங்களது கொடுப்பனவுகளை நேரடியாக நாட்டின் வங்கிக் கணக்குகளுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணய மாற்று வருமானத்தின் அளவும் அதிகரிக்கும்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தைகள், தாமதங்கள் மற்றும் தொடர்ச்சியான பல முயற்சிகளுக்குப் பிறகு பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த முன்னேற்றமானது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம், சுயாதீன தொழில் சமூகம் (Freelancer), தகவல் தொழில்நுட்பத் துறை, ஆரம்பக்கட்ட வர்த்தகங்கள் (Startups), சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஈ-வர்த்தகம் (e-commerce) சார்ந்த தொழில்துறைகள் போன்றவற்றுக்கு தனித்துவமான திருப்புமுனையாக அமையும் எனக்கூறலாம்.
இந்த ஒத்துழைப்பின் படி, ஆரம்பகட்டமாக, மக்கள் வங்கி (BOC), கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றின் மூலம் PayPal சேவைகள் இந்நாட்டிற்குள் செயல்படுத்தப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் ஏனைய வங்கிகளும் இதனுடன் இணையவுள்ளன.
1998 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தொடங்கப்பட்ட PayPal நிறுவனம், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் கட்டண தளங்களில் ஒன்றாக உள்ளதுடன், இது 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 430 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்குச் சேவை வழங்குவதுடன், ஆண்டுதோறும் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளில் ஈடுபடுகிறது. இது உலகளாவிய சுயாதீன தொழில் தளங்களிலும், ஈ-வர்த்தக (e-commerce) தளங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான நிகழ்ச்சி நிரலின் முதன்மை நோக்கங்களான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உருவாக்குதல், டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவித்தல் மற்றும் சர்வதேச சந்தையுடனான தொடர்பை வலுப்படுத்துதல் போன்ற இலக்குகளை அடைவதற்கு இந்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எல்லைகடந்த கட்டண சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம், இந்நாட்டின் சிறு வர்த்தகங்கள் மற்றும் தொழில்முனைவோர் உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளில் மேலும் தீவிரமாகப் பங்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தச் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் விதம் குறித்த மேலதிக விபரங்களை, அந்தந்த வங்கிகள் எதிர்வரும் நாட்களில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறியப்படுத்தும். அத்துடன், மேலதிக விபரங்கள் தேவைப்படும் நபர்கள் அல்லது வர்த்தக நிறுவனங்கள், தாம் கொடுக்கல்-வாங்கல் செய்யும் வங்கியை நேரடியாகத் தொடர்புகொண்டு அது பற்றிய விபரங்களைக் கேட்டறியலாம்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டமானது நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படை கொள்கைகளை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும், அதில் இந்த டிஜிட்டல் மாற்றம் ஒரு சிறப்பான அங்கமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒத்துழைப்பானது நம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைத் தரும் என நம்பிக்கை வெளியிட்ட பிரதமர், இது பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும், தாங்கும் திறனை வளர்ப்பதற்கும் மாத்திரமன்றி, மற்றவர்களைப் பின்பற்றுபவராக மட்டும் இருக்காமல், நமக்கே உரிய தனித்துவமான திறன்களுடன் கூடிய வலுவான மற்றும் நம்பகமான நாடாக பிராந்திய ரீதியிலும் உலக ரீதியிலும் நம்மை நிலைநிறுத்துவதற்கும் இது உதவும் எனத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய:
இது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத தருணமாகும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இலங்கையின் பங்களிப்பு சர்வதேச ரீதியில் மதிப்பீட்டிற்குள்ளாகி வருவதையும், அதேபோன்று பிராந்திய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக எம்மிடம் உயர்ந்த இலக்குகள் காணப்படுகின்றன. எதிர்காலத்தில் இது பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் ஒரு துறையாகவும், அதேபோன்று வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான ஒரு மூலமாகவும் அமையும் என எதிர்பார்க்கிறோம்.
இத்துறைக்குள் மிகவும் திறமையான சுயாதீன தொழில் வல்லுநர்கள் (Freelancers) எம்மிடம் உள்ளனர். வெளிப்படைத்தன்மையுடனான மற்றும் பாதுகாப்பான நிதிச் சேவை அமைப்பொன்றை நிறுவுவது மூலோபாய ரீதியாகவும், அதேபோல் இத்துறையில் எமது தனித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மிகவும் முக்கியமானதாகும். சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகள் (SME), ஒன்லைன் சேவைகள், ஈ-வர்த்தகம் (E-commerce) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதங்கள் மற்றும் சில வருடங்களுக்குள், மிகவும் கவர்ச்சிகரமான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கக்கூடிய, அதிவேகமாக விரிவடைந்து வரும் ஒரு துறையாகவே நான் இதனைக் காண்கிறேன்.
மேலும், இணையவழி சேவைகளும் கொடுப்பனவுகளும் (payments) மிகவும் பாதுகாப்பான, சட்டப்பூர்வமான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க கட்டமைப்பொன்றின் கீழ் கொண்டு வரப்படுவது மிகவும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன். மோசடி நடவடிக்கைகள், பாதுகாப்பற்ற அமைப்புகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் தொடர்பாக உலகளவில் உருவாகி வரும் சூழ்நிலைகளை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, நாம் முன்னோக்கிச் செல்லும்போது, பொறுப்புக்கூறலையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பிற சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளத்தை (platform) நிறுவுவது இன்றியமையாத ஒரு விடயமாகும்.
நாங்கள் டிஜிட்டல் பொருளாதாரம், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சித் துறை (SME) மற்றும் ஈ-வர்த்தகம் (E-commerce) ஆகியவற்றை பரந்த அளவில் வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் கொண்ட துறைகளாகக் கருதுகிறோம். எமது பொருளாதார வளர்ச்சித் திட்டம் இரண்டு அடிப்படைப் பண்புகளைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதாவது, நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவையாகும்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி (SME) துறையை விரிவுபடுத்துதல், சுயாதீன தொழில் வல்லுநர்களுக்கு (Freelancers) கைகொடுத்து உதவுதல், ஈ-வர்த்தகத்தை (E-commerce) முன்னேற்றுதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் போன்றவற்றைப்பற்றி சிந்திக்கும்போது, நமது நாடு நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளான சமூக அநீதி, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் அபிவிருத்தியில் காணப்படும் கடுமையான முரண்பாடுகள் ஆகியவற்றிற்கும் நாம் தீர்வுகளைக் காண வேண்டும். நமது அபிவிருத்தி என்பது அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய, நியாயமான அதேவேளை சமூகப் பொறுப்புணர்வுமிக்க ஒன்றாக அமைய வேண்டும்.
இந்த மாற்றத்திற்காக ஆர்வத்துடன் பங்களிப்புச் செய்யும் நமது இளைய தலைமுறையினர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தியில் அந்த பெறுமதிகளைப் பிரதிபலிப்பதற்குக் தலைமைத்துவத்தை வழங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த ஒத்துழைப்பு நம் அனைவரும் எதிர்பார்க்கும் பலன்களைத் தேடித்தரும் என்று நான் நம்புகிறேன். இது நமது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதன் தாங்கும் திறனை வளர்ப்பதற்கும் உதவுவது மட்டுமல்லாமல், நாம் மற்றவர்களைப் பின்பற்றுபவராக மட்டும் இருக்காமல், நமக்கே உரிய தனித்துவமான திறமைகளைக் கொண்ட வலுவான மற்றும் நம்பிக்கையான நாடாக பிராந்திய ரீதியிலும் உலக ரீதியிலும் நிலைநிறுத்துவதற்கும் வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன:
திறமையான நபர்கள், உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய தயாரிப்புகள் மற்றும் எதிர்காலம் குறித்த சாதகமான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், பல தசாப்தங்களாக நம்பகமான, எளிமையான மற்றும் திறமையான கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த முடியாமல் போனது. உலகம் முழுவதற்கும் சேவைகளை வழங்கும் தொழில்முனைவோர், சுயாதீன தொழில் வல்லுநர்கள் (Freelancers) மற்றும் ஏற்றுமதியாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கோ அல்லது அவர்களின் கொடுப்பனவுகளை திறம்பட பெற்றுக்கொள்வதற்கோ தேவையான முறையான வசதிகள் நம்மிடம் இருக்கவில்லை. ஜனாதிபதி செயலகம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நிதி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களின் தீவிர அர்ப்பணிப்பு காரணமாக, இலங்கையர்களுக்கு அத்தியாவசியமாக இருந்த இந்த டிஜிட்டல் கட்டண தளத்தை தற்போது அவர்களுக்கு திறந்துவிட எம்மால் முடிந்துள்ளது.
இதன் மூலம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வது எளிதாக்கப்படுவது மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் இது மிகவும் எளிதாக்குகிறது.
நம்பகமான மற்றும் திறமையான கட்டண முறைகள் இல்லாததால், பல ஆண்டுகளாக பெருமளவிலான மக்கள் முறையற்ற மற்றும் சட்டவிரோதமான (Grey-market) வழிமுறைகளை நாடினர். இதன் மூலம் கணிசமான அளவு பணம் இலங்கையின் முறையான நிதி கட்டமைப்புக்குள் ஒருபோதும் உள்வாங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, இலங்கையின் டிஜிட்டல் ஏற்றுமதி அளவு சுமார் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தபோதிலும், முறையான வழிகளில் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமை காரணமாக, இதில் ஒரு பெரிய நிழல் தொழிற்துறையும் (Shadow industry) காணப்பட்டது.
இந்த தடைகளை நீக்கி, சரியான பாதையில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது டிஜிட்டல் பரிமாற்ற நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் நாணயங்கள் (Digital currencies) மற்றும் மெய்நிகர் சொத்துகளுக்கான (Virtual assets) ஒழுங்குமுறை கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதிகளவிலான இளம் தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்களிக்கச் செய்ய நாம் விரும்புகிறோம். இந்த உத்தியின் ஒரு பகுதியாக அண்மையில் டிஜிட்டல் சுற்றுலா விசா முறையையும் அறிமுகப்படுத்தினோம். 2030 ஆம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்களிப்பை 20% ஆக அதிகரிக்கவும் நாம் திட்டமிட்டுள்ளோம். ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஏனைய அனைத்து அமைச்சுகளுடனும் தரப்பினர்களுடனும் இணைந்து இந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்துகிறது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க:
டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் ஒரு விசேட முயற்சியாகும். இன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் இந்தப்பணி அதற்கு பெரும் பக்கபலமாக அமையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இதுபோன்ற பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் ஒரு கட்டமைப்பை இலங்கைக்குக் கொண்டு வருவது குறித்து கடந்த பத்து, பன்னிரண்டு வருடங்களாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. அங்கு சில தடைகள் ஏற்பட்டிருந்தன. இருப்பினும், ஜனாதிபதி அலுவலகம் என்ற
ரீதியில் நாங்கள் முன்னின்று, இந்தியாவின் PayPal நிறுவன பிரதிநிதிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடினோம். அதன் விளைவாக, இன்று இலங்கைக்கு இந்த PayPal வசதியை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. இது குறித்து எமது கண்டுபிடிப்புகள் வர்த்தகமயமாக்கல் பிரிவின் கலாநிதி முதித செனரத் யாப்பாவுக்கு விசேட நன்றியைத் தெரிவிக்க வேண்டும். மத்திய வங்கி மற்றும் நிதித்துறையைச் சேர்ந்த அனைவரினதும் பங்களிப்புடன் இன்றைய தினம் இந்த பணியை எம்மால் வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது.
குறிப்பாக நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கும், அதேபோல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த செயல்முறை மிகவும் வசதியாக அமையும். அத்துடன், PayPal என்பது நமது நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கு இன்றைய காலத்திற்கு அவசியமான ஒரு தேவையாகும். அந்தத் தேவை இன்றைய நாளில் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். இதன் மூலம் கிடைக்கின்ற இந்த வசதியைப் பயன்படுத்தி, தங்களுடைய தொழில்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு இளைய தலைமுறை தொழில்முனைவோருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க:
பல வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற FinTech விழாவின் போது, நான் முதன்முறையாக PayPal நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் (CEO) இது குறித்து கலந்துரையாடினேன். அந்த நேரத்தில், அவர்கள் இலங்கையை ஒரு சாத்தியமான வர்த்தக வாய்ப்பாகப் பார்க்கவில்லை. ஆனால் இன்று PayPal நிறுவனம் இலங்கையின் வாய்ப்பை (Potential) கண்டறிந்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இது இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கியமான படியாகும். சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிலதிபர்களுக்கும் அதேபோன்று வங்கித் துறைக்கும் வெற்றியைத் தரும் (Win-win) ஒரு சூழ்நிலையாகும். இன்றைய உலகில் தொழிலதிபர்களும் தொழில் வல்லுநர்களும் புவியியல் எல்லைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்றாலும், இலங்கையின் சுயாதீன தொழில் வல்லுநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால்களில் ஒன்று, சர்வதேச கொடுப்பனவுகளை திறம்பட பெற்றுக்கொள்வதில் இருந்த சிரமமாகும்.
PayPal நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான நிறுவன விவகார பணிப்பாளர் நாத் பரமேஸ்வரன் (Nath Parameshwaran):
இலங்கையைப் போன்றே PayPal நிறுவனத்திற்கும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இன்றைய தினம் கலந்துகொள்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இன்றைய தினம் விடுக்கப்பட்ட இந்த அறிவிப்பானது, அரசாங்கம், நிதி நிறுவனங்கள், நிதி ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் இத்துறை சார்ந்த ஏனைய பங்குதாரர்களுக்கு இடையே நிலவும் வலுவான ஒத்துழைப்பை மிகச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகத் தலைமைத்துவம், வழிகாட்டல் மற்றும் ஆதரவை வழங்கியமைக்காக இலங்கை அரசாங்கம், ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றிற்கு எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘2030 டிஜிட்டல் பொருளாதார பார்வை’ என்பது அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்காக, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இணைப்பின் திறனை மிகச்சரியாக இனம் கண்டுள்ள, எதிர்காலத்திற்குப் பொருத்தமான, உயர் இலக்குகளைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி நிரலாகும். இதில் குறிப்பாக, டிஜிட்டல் மாற்றத்தின் பலன்களை நாடு முழுவதும் உள்ள சிறு வணிகங்கள், சுயாதீன தொழில் வல்லுநர்கள் (Freelancers) மற்றும் தொழில்முனைவோருக்குக் கொண்டு சேர்ப்பதில் காட்டப்பட்டுள்ள கவனம் தனித்துவமானது.
சிறு வர்த்தகங்களும் சுயாதீன தொழில் வல்லுநர்களும் இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். மேலும் இணைக்கப்பட்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். இது கடந்த சில மாதங்களாக அனைத்துப் பங்குதாரர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட ஒரு உண்மையான கூட்டாண்மையின் விளைவாகும். PayPal நிறுவனத்தின் தரப்பிலிருந்து பார்க்கும்போது, இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்லவும், இலங்கை பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து, ஒரு பொறுப்பான பங்கினை வகிக்கவும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம்.
PayPal இன் சர்வதேச எல்லைகடந்த வர்த்தகத்திற்கான சிரேஷ்ட துணைத் தலைவரும், ஆசிய பசுபிக் பிராந்திய பொது முகாமையாளருமான நாதியா சயீத் (Nadia Syed):
இந்த முக்கிய தருணத்தின் ஒரு அங்கமாக இருப்பதையிட்டு நாங்கள் பெருமையடைவதோடு, இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஒரு பொதுவான இலக்கை நோக்கி அரச மற்றும் தனியார் துறை பங்காளர்களை ஒன்றிணைக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
PayPal நிறுவனமாக எங்களது நோக்கம் எப்போதும் சிறு வணிகங்கள், தொழில் வல்லுநர்கள் (Freelancers), தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் ஆகியோர் உலகளாவிய பொருளாதாரத்தை அணுகுவதற்கான சக்தியை வழங்குவதாகும். 200க்கும் மேற்பட்ட சந்தைகளில் 439 மில்லியன் செயலில் உள்ள கணக்குகளுடன், வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் எளிமையானதாக, பாதுகாப்பானதாக மற்றும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு ஏற்கனவே சேவைகளை வழங்கி வரும், வலுவான மற்றும் திறமையான சுயாதீன தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆரம்பக்கட்ட வர்த்தக (Startups) சமூகத்தை இலங்கை கொண்டுள்ளதை நாங்கள் காண்கிறோம்.
அவர்களின் திறன்கள் உலகளாவிய ரீதியிலானவை, அதேபோல் அவர்களுக்கான வாய்ப்புகளும் பரந்தவை. இலங்கை வங்கி (BOC), கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து, இலங்கையில் உள்ள PayPal பயனாளிகள் மற்றும் வர்த்தகங்களுக்கு மிகவும் எளிதாக அணுகக்கூடிய எல்லைகடந்த கட்டணச் சேவையை (Cross-border payments) வழங்குவதற்கான ஒரு முக்கிய படியை நாங்கள் எடுத்து வருகிறோம். இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைவதற்கு ஆதரவளிக்கும் வகையில், எங்களது வங்கிப் பங்காளர்களுடன் இணைந்து இப்பயணத்தை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.
இலங்கை வங்கியின் பொது முகாமையாளரும் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வை. ஏ. ஜயதிலக:
இலங்கையில் 16 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறோம். இதில் முக்கியமாக, இணையவழி தொழில்நுட்பம் ஊடாக வெளிநாடுகளுக்கு சுயாதீன சேவைகளை வழங்கும் இளைய தலைமுறையினருக்காக ‘Smart Freelancer’ என்ற பெயரில் புதிய சேவையை ஆரம்பித்துள்ளோம். அதேபோல், அவர்களுக்காக ‘E-Creator’ எனும் பெயரில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் தனித்துவமான கடன் திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். அத்துடன், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு
பணம் அனுப்புபவர்களுக்காக ‘Smart Remit App’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கிடையில் நிலவிய சிறந்த கொடுப்பனவு ஊடகத்திற்கான குறையை நிவர்த்தி செய்ய ‘PayPal’ தளத்தினால் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இலங்கையில் உள்ள சுயாதீன சேவை வழங்குநர்களில் சுமார் 150,000 பேர் இலங்கை வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆவர். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் சம்பளம் அல்லது ஏனைய கொடுப்பனவுகளை மிகவும் வினைத்திறனாகவும் பாதுகாப்பாகவும் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு PayPal போன்றதொன்றின் தேவைப்பாடும் அவசியமும் காணப்பட்டது. அதற்காக இலங்கை மத்திய வங்கி எடுத்த முயற்சிகளுக்கு இலங்கை வங்கி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க:
PayPal முறைமை மற்றும் பணம் மீளப் பெறும் வசதி (Withdrawal facility) அறிமுகப்படுத்தப்பட்டமையானது டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். PayPal என்பது வெறும் கொடுப்பனவு முறைமை மட்டுமல்ல. இது இந்நாட்டு வர்த்தக சமூகத்திற்கும், சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் டிஜிட்டல் சுயாதீன தொழில் வல்லுநர்களுக்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மிக எளிதாக அணுகவும் அதனுடன் இணையவும் கிடைத்துள்ள மிகத் தீர்மானமிக்கதொரு வாய்ப்பாகும். இலங்கையின் பொருளாதாரத்திற்கு டிஜிட்டல் சுயாதீன தொழில் வல்லுநர்களிடமிருந்து மிகவும் சாதகமான பங்களிப்பு கிடைக்கிறது. உலகம் முழுவதும் இத்தகைய வல்லுநர்கள் தமது திறமை மற்றும் படைப்பாற்றல் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். இவர்களுக்கு நீண்டகாலமாக உத்தியோகபூர்வமான மற்றும் வசதியான முறையில் வெளிநாட்டுப் பணத்தைப் பெறுவதற்கான வசதி இல்லாதது ஒரு பெரிய தடையாக இருந்தது. PayPal முறைமையின் அறிமுகத்துடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இதன் மூலம் நாட்டிற்குள் வெளிநாட்டுச் செலாவணி வருகை வலுவடையும் அத்துடன் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுயாதீன தொழில் வல்லுநர்கள் வழங்கும் பங்களிப்பிற்கு சரியான மதிப்பும் கிடைக்கும்.
சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் சஞ்சய குணவர்தன:
பல வருடங்களாக நாங்கள் எடுத்த பெரும் முயற்சியின் பலனாகவே இந்த சந்தர்ப்பத்தைப் பார்க்கிறோம். PayPal முறைமையின் அறிமுகத்தை மற்றுமொரு கொடுப்பனவு வசதியாகவோ அல்லது தொழில்நுட்ப தீர்வாகவோ மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. இலங்கையை உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்துடன் மேலும் இணைப்பதற்கும், நாட்டு மக்களுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும் மிக முக்கியமானதொரு முன்னோடிப் படியாகவுமே இதனைக் கருதுகிறோம். இன்று உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகள், Fintech கண்டுபிடிப்புகள் மற்றும் எல்லை கடந்த நிதித் தொடர்புகள் ஆகியவை உலகப் பொருளாதாரத்தின் முக்கிய சக்திகளாக மாறியுள்ளன. இவை இனிமேலும் வெறும் துணைச் சேவைகள் மட்டுமல்ல.உலகப் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதித் திட்டங்கள், தொழில்முனைவோர் வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மற்றும் ஒரு நாட்டின் போட்டித்தன்மையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இவை அமைகின்றன.
இலங்கைக்கு இந்த டிஜிட்டல் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமை, ஆற்றல் மற்றும் படைப்பாற்றல் ஏற்கனவே இருப்பதை நாம் கண்டுள்ளோம். இன்று சுயாதீன தொழில் வல்லுநர்கள், தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் படைப்பாளர்கள் உலகம் முழுவதும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர். அவர்களுக்குத் தேவையானது சர்வதேச சந்தையுடன் இணைவதற்கு வசதியான, நம்பகமான மற்றும் வினைத்திறனான நிதி முறைமையாகும். சம்பத் வங்கி PayPal முறைமையுடன் இந்தப் பயணத்தைத் தொடங்கிய தருணத்தில், இலங்கையை உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்துடன் மிகவும் வலுவாக இணைப்பதே எமது நோக்கமாக இருந்தது. எமது அந்தப் பயணம் இன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாக மாறியிருப்பதைக் காண்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க.
