நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால், தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதி, மடக்கும்பர புதுக்காடு பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்தமையால் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூன் 04) அதிகாலை வேளையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
தினமும் இந்தப் பாதையைப் பயன்படுத்திப் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் தமது தொழில் நிமித்தமாகப் பல்வேறு இடங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள், போக்குவரத்து முடக்கத்தினால் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பொலிஸார், குறித்த வீதியைச் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி வட்டக்கொடை வரையிலான போக்குவரத்து மட்டுமே இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாதையை முழுமையாகச் சீரமைக்கும் வரையில், சாரதிகள் மற்றும் பயணிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.
கௌசல்யா.
