டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு நாளாந்தம் வருகை தரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் முறையான பேருந்து தரிப்பிடம் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சாமிகலை, மஸ்கெலியா, நல்லதண்ணி, ஹப்புகஸ்தனை, பொகவந்தலாவ, நோர்வூட் மற்றும் ஹட்டன், டிக்கோயா, புளியாவத்தை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து நாளாந்தம் பெருந்திரளான மக்கள் சிகிச்சைக்காகவும், மாதாந்த கிளினிக் பரிசோதனைகளுக்காகவும் இவ்வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர். மேலும், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு கொண்டு வரும் உறவினர்கள் மற்றும் கடமைக்கு வரும் ஊழியர்கள் எனப் பலரும் பேருந்து சேவைகளையே நம்பியுள்ளனர்.
இருப்பினும், தற்போதைய நிலையில் அங்குள்ள பேருந்து தரிப்பிடம் பாவனைக்கு உதவாத வகையில் சிதைவடைந்து காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் மழையிலும், வெயில் காலங்களில் கடும் வெயிலிலும் நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்:
”குறிப்பாக சாமிமலை பகுதியிலிருந்து வரும் மக்களுக்காக ஹட்டன் வழி நோர்வூட் சாலையிலும், ஹட்டன் மற்றும் டிக்கோயா பகுதியிலிருந்து வரும் மக்களுக்காக நோர்வூட் வழி ஹட்டன் சாலையிலும் என தலா இரண்டு பேருந்து தரிப்பிடங்களை அமைக்க வேண்டும். இது எமது நீண்டகாலக் கோரிக்கையாகும்.”
தற்போது மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையினால், வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இது குறித்து ஹட்டன் – டிக்கோயா நகர சபை மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகக் கவனம் செலுத்தி, நோயாளிகளின் நலன் கருதி முறையான பேருந்து தரிப்பிடங்களை அமைத்துத் தர முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பெருமாள்

