மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள்
கடந்த 11-ம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி, ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று (16) மதியம் 12 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவைச் சேர்ந்த கிட்ணன் சிவபெருமான் (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 11-ம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போனதையடுத்து, ஸ்டரஸ்பி தோட்ட குமரி பிரிவு தொழிலாளர்கள் அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். குமரி பிரிவில் உள்ள ஆற்றங்கரைக்கு அருகில் அவரது காலணிகள் கிடந்ததைக் கண்ட தொழிலாளர்கள், அங்கிருந்து ஆரம்பித்து மவுசாகலை நீர்த்தேக்கம் வரையிலும் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.
சுமார் 5 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் பயனாக, அவர் வசித்து வந்த பகுதியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, கவரவலை தோட்ட அப்பர் குரூடன் பகுதியில் ஊடறுத்துச் செல்லும் சாமிமலை ஓயாவில் சடலம் ஒதுங்கியிருந்ததை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
சடலம் குறித்து பொதுமக்கள் உடனடியாக மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார், ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர்.
இதனையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
