Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

July 17, 2026

இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

July 17, 2026

அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

July 17, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு
இலங்கை

இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

ThanaBy ThanaJuly 17, 2026No Comments8 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

இந்தியத் துணைக்கண்டத்திற்கும் கடல் கடந்த ஏனைய நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று உருவானது அல்ல. அவை பன்னெடுங்காலமாக வணிகம், நாடுகாண் பயணங்கள் ஊடாக வளர்ந்து வந்துள்ளன. இத்தொடர்பானது பிற்பட்ட காலங்களில் காலனித்துவம் ஊடாக மேலைநாட்டோடு இன்னும் நெருங்கிய தொடர்பையும், அவற்றோடு இந்து பண்பாட்டையும் வளரச் செய்தது. இதற்கு வணிகம், குடியேற்றம், மதப்பரப்பு போன்ற காரணங்கள் உந்துசக்தியாகக் காணப்பட்டன.

இவ்வாறான சூழ்நிலையில்தான் மேலைநாட்டு அறிஞர்களின் இந்திய வருகை ஏற்பட்டது. இந்த மேலைநாட்டு அறிஞர்களின் வருகையினால் இந்தியாவின் தொல்லியல், அகழ்வாராய்ச்சி மற்றும் கலை, பண்பாடு என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ஆஸ்திரிய நாட்டுப் பெண் அறிஞரான ஸ்டெல்லா கிராம்ரிஷ் (Stella Kramrisch) அவர்களின் வருகையும் அமைந்தது. இவரின் இந்திய வருகையினால் அதுவரையிலும் காணப்பட்ட இந்தியாவின் இந்து கட்டிடக்கலை தொடர்பான மேலைத்தேசத்தவர்களின் ஆய்வுகள் சரியாக ஆவணப்படுத்தப்பட்டன.

அந்தவகையில், இந்து கோயில் கட்டிடக்கலையை ஆய்வுக்கு உட்படுத்தி முறையாக ஆவணப்படுத்துவதில் பங்களிப்பு செய்த ஸ்டெல்லா கிராம்ரிஷ் அம்மையார் ஒரு சிறந்த கலை வரலாற்று ஆசிரியர் ஆவார். ஆஸ்திரிய நாட்டில் பிறந்த ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷிற்கு இந்தியக் கலை மீது ஏற்பட்ட ஈர்ப்பு, அவரது வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே தொடங்கி உலகெங்கிலும் இந்தியக் கலையைப் பற்றிய புரிதலையும் பாராட்டுதலையும் ஆழமாகப் பதிக்கின்ற ஒரு வாழ்நாள் அர்ப்பணிப்பாக வளர்ந்தது.

இவர் 1896 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி, அப்போதைய ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசின் ஒரு பகுதியாக இருந்த மொராவியாவில் பிறந்தார். தனது சிறுவயதிலேயே கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் கொண்ட கிராம்ரிஷ், வியன்னா பல்கலைக்கழகத்தில் கலை வரலாறு பயின்றார். அங்கு பயின்று 1919 ஆம் ஆண்டு முனைவர் (Ph.D.) பட்டத்தைப் பெற்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் புகழ்பெற்ற இந்தியக் கலை வரலாற்று ஆசிரியரான திரு. ஆனந்த குமாரசுவாமியின் விரிவுரைகளில் கலந்துகொண்டார்.

இதன்போது, அவருக்கு முதன்முதலில் இந்தியத் தத்துவம் மற்றும் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. இச்சந்தர்ப்பமானது இந்தியக் கலை மீதான அவரது ஆர்வத்தைத் தூண்டி, அது தொடர்பான ஆய்வில் அவரை ஆழமாக மூழ்க வைத்தது. இதன் பின்னர் ஸ்டெல்லா கிராம்ரிஷ் 1922 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முதன்முதலில் வருகை தருகிறார். அப்போது கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கற்பிக்க வந்த அழைப்பை ஏற்று, அங்கு விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். இந்தியாவில் கற்பித்துக் கொண்டிருந்த கிராம்ரிஷ், மேற்கத்திய அழகியல் கலையை கற்பித்தது மட்டுமின்றி, அங்குள்ள பாரம்பரிய இந்தியக் கலை வடிவங்கள் மற்றும் கலைஞர்களுடன் கலந்துரையாடி தனது கல்வி சார்ந்த அணுகுமுறையை வரையறுக்கக்கூடிய ஒரு தனித்துவமான பண்பாட்டுப் புரிதலையும் வளர்த்துக்கொண்டார்.

இவ்வாறான இந்தியக் கலைகள் மீதான ஆர்வத்தினால் ஏற்பட்ட ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் ஆய்வுகள், உலக அளவில் இந்து கலைகள் தொடர்பான விடயங்களைக் கொண்டு சேர்த்தன. அந்தவகையில், இவர் இந்தியக் கலைகள் தொடர்பாகச் செய்த ஆய்வுகளிலும், அவர் இந்தியக் கலைக்குச் செய்த பங்களிப்புகளிலும் அவரது படைப்புகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஸ்டெல்லாவின் படைப்புகள் பெரும்பாலும் இந்தியக் கலைகள் பற்றியதாகவே அமைந்தன. அவற்றில் இந்து கோயில் கட்டிடக்கலை பற்றிய அவரது ஆய்வு மிக முக்கியமான பேசும்பொருளாகக் காணப்பட்டது.

ஸ்டெல்லா கிராம்ரிஷ் ஆற்றிய பங்களிப்புகளில் இந்து கோவில் கட்டிடக்கலை தொடர்பான பங்களிப்பும், அது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆவணப் படைப்புகளும் இந்து கோவில் கட்டிடக்கலையின் உன்னதத்தையும் அதன் ஆன்மீக உண்மைகளையும் வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றன.

அந்தவகையில், ஸ்டெல்லா கிராம்ரிஷ் அவர்கள் இந்து கோயில் கட்டிடக்கலைக்கு ஆற்றிய பங்களிப்புகளை விரிவாக எடுத்து நோக்கும்போது:

கிராம்ரிஷ்ஷின் இந்து கோயில் கட்டிடக்கலைப் பணிகள்

இந்தியக் கலைக்கு ஸ்டெல்லா கிராம்ரிஷ் ஆற்றிய பங்களிப்புகளில் அவரது “தி ஹிந்து டெம்பிள்” (The Hindu Temple) என்ற நூல் இந்தியக் கலை ஆய்வுக்கு அடித்தள நூலாகக் கருதப்படுவதோடு, இந்நூலானது அவர் இந்து கோவில் கட்டிடக்கலைக்கு ஆற்றிய பங்களிப்பை விரிவாக எடுத்துக்காட்டுகிறது. இவரது இந்த நூலானது இந்து கோவில் கட்டுமானத்தின் கட்டிடக்கலை, குறியீட்டுத் தன்மை மற்றும் ஆன்மீகப் பரிணாமங்களைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வாகக் காணப்படுகின்றது.

இப்படைப்பில் சமஸ்கிருத நூல்கள், கோவில் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெற்று, கோவிலை ஒரு பௌதீக மற்றும் தத்துவார்த்த அமைப்பாக ஆய்வு செய்துள்ளார். கலை வரலாறு, மானுடவியல், தத்துவவியல் ஆகியவற்றை இணைத்து இந்திய கோவில் கட்டிடக்கலை பற்றிய ஒரு முழுமையான புரிதலை வழங்கிய அவரது “இந்து கோவில்” என்ற நூல் படைப்பு ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் ஆக்கங்களில் மிக முக்கியமான ஒன்றாக அமைந்தது.

கட்டுமானச் செயல் என்பது ஒரு சடங்காகவும், கோயில் என்பது அதன் புராணக்கதையின் அடிப்படையில் செய்யப்படும் கட்டிடக்கலைச் சடங்குகளின் கூட்டுத்தொகை என்பதே இந்நூலின் மையக் கருத்தாகும். பண்டைய வாஸ்து சாஸ்திர நூல்களில் வகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டமைப்பு விதியும் முழுமையான வழிபாட்டுப் பொருளைக் கொண்டுள்ளது.

இந்நூலானது, ஆலயக் கட்டமைப்பு மற்றும் அதன் கோட்பாட்டுக் கருப்பொருட்கள் ஆகிய இரண்டும் கோயிலின் புவியியல் அமைப்பிலிருந்து அதன் இறுதி கோபுரம் வரையான உருவாக்கத்தை முறையாக விவரிக்கிறது. அவற்றை விரிவாக நோக்குமிடத்து:

  • இடமும் சூழலும்: கோயில் கட்டுமானத்தில் இடமும் சூழலும் இன்றியமையாத ஒன்றாகும். ஒரு கட்டுமானம் தொடங்குவதற்கு முன், நிலத்தைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியமானது. அந்தவகையில் கோயில் கட்டுமானத்தின் பாரம்பரியத் தேவைகளை கிராம்ரிஷ் கோடிட்டுக் காட்டுகிறார். அதாவது, கோயில்கள் இயற்கையாகவே தூய்மையாக இருக்கும் இடங்களான ஆறுகள், கடல்கள், மலைகள் அல்லது காடுகளுக்கு அருகில் கட்டப்பட வேண்டும். அங்கு விலங்குகள் அச்சமின்றி இளைப்பாறும் என்றும், தெய்வங்கள் இயல்பாகவே வாசம் செய்ய விரும்பும் என்றும் கிராம்ரிஷ் குறிப்பிடுகிறார்.

  • வாஸ்து புருஷ மண்டலம்: இரண்டாவது வாஸ்து மண்டலம் ஆகும். இது இந்துக் கட்டிட வரைபடம் மற்றும் முழு கோயில் தள அமைப்பும் கட்டமைக்கப்பட்டுள்ள தத்துவார்த்தத் திட்டமாகும். இது பேரண்டமான பிரபஞ்சத்தை சிற்றண்டமான கோயில் அறையுடன் இணைக்கும் ஒரு புனிதமான வடிவியல் சீரமைப்புக் கருவியாகச் செயல்படுகிறது.

    ஸ்டெல்லா கிராம்ரிஷ் வாஸ்து புருஷ மண்டலத்தை இரண்டு வகையாகப் பிரித்துக் காட்டுகின்றார். அதாவது, பிருஹத் சம்ஹிதையில் குறிப்பிடப்பட்ட இரண்டு வகையான வாஸ்து புருஷ மண்டலங்களின் வரைபடங்கள் பற்றி குறிப்பிட்டார். அதில் ஒன்று 81 சதுர மண்டலங்களைக் கொண்ட வரைபடம், மற்றொன்று 64 சதுர மண்டலங்களைக் கொண்ட வரைபடமாகும். இதில், கோயில்கள் எப்போதும் 64 சதுர மண்டலங்களைக் கொண்ட அமைப்பிலேயே கட்டப்பட வேண்டும் என்றும், 81 சதுர மண்டலங்களைக் கொண்ட அமைப்பு வீடுகளைக் கட்டப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் 81 சதுரங்களைக் கொண்ட வாஸ்து அரசர்களின் வழிபாட்டுக்கு உகந்தது என்றும், 64 சதுரங்களைக் கொண்ட வாஸ்து கோயில்களையும் அதன் ஊடாக பிராமணர்களின் வழிபாட்டிற்கும் உதவும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இந்நூலின் ஊடாக ஸ்டெல்லா 32 வகையான வாஸ்து மண்டலங்களின் தொடர் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். அந்தவகையில் கட்டிடக்கலை பற்றி இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சகல கட்டிடக்கலை தொடர்பான சாஸ்திர முறைப்படியான விடயங்களை இந்நூல்களின் ஊடாகச் சரியான தரவுகளின்படி ஆய்வுகளை மேற்கொண்டு ஆவணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • கர்ப்பக்கிருகம் மற்றும் சிகரம்: கோயிலின் இருண்ட, அலங்காரமற்ற மையத்தில் கர்ப்பக்கிருகம் அமைந்துள்ளது. அது, உயிரும் படைப்பும் தோன்றும் ஆதி மறைவான குகையைக் குறிக்கிறது. அது மூலவரைக் கொண்டுள்ளதுடன், பூமியை விண்ணுலகத்துடன் இணைக்கும் நேரடி அச்சுக்கோட்டையும் வழங்குகிறது. செங்குத்தான கோபுரங்கள் நம்பமுடியாத கணிதத் துல்லியத்துடன் எவ்வாறு சமச்சீராக உயர்கின்றன என்பதை இந்நூல் விவரிக்கிறது. ஒருமைய வட்டங்கள் மற்றும் சுழலும், ஒன்றையொன்று வெட்டும் சதுரங்கள் போன்ற கோட்பாடுகளைப் பயன்படுத்தி, சிகரம் ஒரு பிரபஞ்சத் தூணாக உருவாகி, பூமியின் ஆற்றலை மேல்நோக்கி அதன் உச்சியில் உள்ள அமலகம் மற்றும் கலசத்தை நோக்கி ஈர்க்கிறது.

இவை தவிர, கோயில் தீர்த்தம், கோயில், அதைக் கட்டுபவர், கட்டுமானத் திட்டம், அதனுடனான தெய்வீகத் தொடர்பு, கட்டுமானப் பொருட்கள், கோயில் பெயர்கள், தோற்றப்பின்னணி, கோயில் கட்டுவதன் நோக்கம் என்பன பற்றியும் விரிவான தனது ஆய்வு மூலம் இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் ஆய்வில், “இந்தியன் ஸ்கல்ப்சர்” (Indian Sculpture) மற்றும் “தி ஹிந்து டெம்பிள்” (The Hindu Temple) ஆகிய இரண்டு நூல்களும் தனித்தனி கருத்துக்கள் அல்ல. அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இந்து கோயில் கட்டிடக்கலையின் முக்கிய ஆவணங்கள் ஆகும்.

ஸ்டெல்லா கிராம்ரிஷ் எழுதிய “இந்தியன் ஸ்கல்ப்சர்” (Indian Sculpture) என்ற நூல், 1933 இல் மோதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தால் முதன்முதலில் வெளியிடப்பட்டது. இது தெற்காசிய கலை வரலாற்றுத் துறையில் ஒரு அடித்தளப் படைப்பாகும். இந்த நூலின் ஊடாக வரலாற்றுக்குள் செல்வதற்கு முன், இந்திய சிற்பக்கலையானது மேற்கத்திய செவ்வியல் கலையிலிருந்து உள்ளார்ந்த முறையில் வேறுபட்டது என்பதை கிராம்ரிஷ் நிறுவுகிறார்.

இந்திய சிற்பங்கள் வெறுமனே எலும்பையும் தசையையும் பிரதிபலிப்பதில்லை என்று வாதிடுகிறார். மாறாக, அந்த உருவங்கள் பிராணனால் நிரம்பியிருப்பது போல் தோற்றமளிக்கின்றன. பண்டைய கைவினைஞர், கனமான, உயிரற்ற பொருட்களை ஆன்மீக மற்றும் மெய்யியல் சார்ந்த ஒரு கலனாக எவ்வாறு மாற்றுகிறார் என்பதை அவர் குறிப்பிடுகிறார். பௌதீக வடிவம் தெய்வீகத்திற்கான ஒரு பாலமாகச் செயல்படுகிறது.

இந்நூலில் இந்திய சிற்பங்களின் காலவரிசைப் பரிணாமத்தை முன்வைக்கிறார். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி மௌரியர் காலம், பர்ஹுத் (Bharhut) மற்றும் சாஞ்சி, மதுரா பாணி, அமராவதி சிற்பங்கள், குப்தர் காலம் வரை சிற்பங்களை ஆவணப்படுத்தியுள்ளார். இந்து கோவில் கட்டிடக்கலை மரபில், கிராம்ரிஷ் சிற்பக்கலையையும் கட்டிடக்கலையையும் பிரிக்க முடியாத, உயிருள்ள ஓர் ஒற்றுமையாகக் காண்கிறார். கோயிலின் கட்டிடக்கலை அமைப்பு உடலாகச் செயல்படுகிறது; அதே சமயம் சிற்பம் அதற்கு உள்ளேயும் அதன் மீதும் உள்ள தெய்வீகத்தின் வெளிப்பாடாகச் செயல்படுகிறது.

திராவிட மற்றும் கேரளா கட்டிடக்கலைப்பாணி ஆய்வுகள்

மேலும், திராவிட மற்றும் கேரளா கட்டிடக்கலைப்பாணி தொடர்பாக ஸ்டெல்லா கிராம்ரிஷ் ஆய்வு செய்ததில், கேரள மண்ணின் திருவிதாங்கூர் கலையில் திராவிடமும் கேரளமும் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பது பற்றிய ஆய்வில் நூல் ஒன்றை வெளியிட்டார். அது “திராவிட அண்ட் கேரளா இன் தி ஆர்ட் ஆஃப் ட்ராவன்கோர்” (Dravida and Kerala in the Art of Travancore) என்ற பெயரில் வெளியானது. அதில் சதுர மற்றும் வட்ட வடிவ திராவிட கோயில்கள், கேரளத்து கோயில்கள், வீடுகள் மற்றும் அரண்மனைகள், திருவிதாங்கூரிலுள்ள கல் சிற்பங்கள், உலோகச்சிலைகள், மரச்சிற்பங்கள், ஓவியங்கள் என்பன பற்றிய ஆய்வின் ஊடாக இவை இரண்டிற்கும் இடையிலான தொடர்பு பற்றிய தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளார்.

திருவிதாங்கூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இராச்சியத்தில், இரண்டு தனித்துவமான கலை மரபுகளான திராவிட பாணி மற்றும் உள்நாட்டு கேரளப் பாணி எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து செழித்து வளர்ந்தன என்பதை இந்நூல் ஒரு ஆழமான கட்டமைப்பு மற்றும் தத்துவார்த்தப் பகுப்பாய்வு மூலம் விளக்குகிறது. கிராம்ரிஷ், இந்தியாவின் மேற்குக் கடற்கரை பகுதியின் தனித்துவமான அம்சங்களைத் தனித்துப் பிரித்து, அதன் கட்டிடக்கலை, கல் மற்றும் உலோகச் சிற்பங்கள், மரச் செதுக்கல்கள் மற்றும் சுவரோவியங்களை வரைபடமாக்கினார். திருவிதாங்கூர் இரண்டு தனித்துவமான கலை மொழிகள் சங்கமிக்கும் ஒரு கலாச்சார மையமாக செயல்பட்டது என்று கிராம்ரிஷ் நிறுவுகிறார்.

  • கல் கோயில்கள்: கிராம்ரிஷ் திராவிடத் தாக்கத்தின் கீழ் கட்டப்பட்ட திருவிதாங்கூரின் கல் கோயில்களை வகைப்படுத்துகிறார். அவை தென்னிந்தியக் கட்டிடக்கலையின் செவ்வியல் கட்டமைப்பு விதிகளைப் பின்பற்றும் அதே வேளையில், உள்ளூர் சூழலுக்கு ஏற்பத் தங்களை மாற்றியமைத்துக் கொள்கின்றன என்பதையும் அவர் பகுப்பாய்வு செய்கிறார். வட்ட வடிவ திராவிடக் கோயில்கள் ஒரு குறிப்பிடத்தக்க பிராந்திய வேறுபாடு ஆகும். இதில் வட்ட வடிவ அமைப்பு, கருவறைக்கும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதட்சிணப் பாதைக்கும் ஒரு தனித்துவமான இடஞ்சார்ந்த ஓட்டத்தை உருவாக்குகிறது.

  • மரக் கோயில்கள் மற்றும் வீடுகள்: கேரளக் கோயில்கள், வீடுகள் மற்றும் அரண்மனைகள் பற்றி கிராம்ரிஷ் விவரிக்கையில், அவை முற்றிலும் உள்நாட்டுப் பாணியை எடுத்துக்காட்டுகின்றன என வாதிடுகிறார். கிழக்குக் கடற்கரையின் கனமான கற்கோயில்களைப் போலல்லாமல், கேரளக் கோயில்கள் பெருமழையைத் திசைதிருப்புவதற்காக ஓடுகள் அல்லது செப்புத் தகடுகளால் வேயப்பட்ட, கூர்மையான சரிவுடைய, முகப்புடைய பல அடுக்கு மரக் கூரைகளைக் கொண்டுள்ளன. பாரம்பரிய நாலுகெட்டு வீடுகள் போன்ற வீட்டுக் கட்டிடக்கலையும், பத்மநாபபுரம் அரண்மனை போன்ற பிரம்மாண்டமான அரச இடங்களும், கோயில்களைப் போலவே தூய்மையான மர வேலைப்பாடுகள், திறந்தவெளி முற்றங்கள் மற்றும் இயற்கையோடு இயைந்திருத்தல் ஆகியவற்றைச் சார்ந்து, அதே கட்டமைப்பு இலக்கணத்தைப் பகிர்ந்து கொள்கின்றன என்று கிராம்ரிஷ் வலியுறுத்துகிறார்.

கிராம்ரிஷ் திருவிதாங்கூரை பரந்த தென்னிந்தியக் கலையின் ஒரு சாதாரணமாகக் கருதாமல், ஒரு தனித்துவமான கலை மண்டலமாகக் கட்டமைக்கிறார். திராவிடப் பாணியின் கல்லால் கட்டப்பட்ட, கட்டமைப்பு சார்ந்த ஒழுக்கத்தையும், கேரளப் பாணியின் மரத்தை மையமாகக் கொண்ட, உணர்ச்சி வெளிப்பாட்டுடன் கூடிய, காலநிலையை எதிர்க்கும் வீரியத்தையும் வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம், ஒரு பிராந்தியக் கலை வடிவம் தனது பூர்வீகத் தன்மையை இழக்காமல், வெளிப்புறப் பேரரசுத் தாக்கங்களை எவ்வாறு உள்வாங்கிக் கொள்ள முடியும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

முடிவுரை

மேற்கத்திய அறிஞர்களால் இந்தியக் கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்தும் பணி என்பது வெறும் தொல்லியல் கணக்கெடுப்பாகத் தொடங்கி, பின்னர் ஆன்மீக மற்றும் தத்துவக் கண்டுபிடிப்பாகப் பரிணமித்தது. இதனை ஸ்டெல்லா கிராம்ரிஷ் தனது மெய்யியல் மற்றும் ஆன்மீகப் பார்வையின் மூலம் மிகச் சிறப்பாக நிறைவு செய்தார். பாரம்பரிய ஆகம நூல்களையும் வாஸ்து புருஷ மண்டலத்தையும் அடிப்படையாகக் கொண்டு, அவர் கோயிலை ஒரு வெளிப்பாட்டின் வடிவமாகவும் ஒற்றுமையின் குறியீடாகவும் உலகிற்கு விளக்கினார். அவரது இந்த அணுகுமுறை இந்தியக் கலை வரலாற்றைக் காலனியக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, அதற்குரிய தன்னாட்சிப் பண்பையும் உலகளாவிய மதிப்பையும் பெற்றுத் தந்தது. இதனால், இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்திய மேற்கத்தியர்களின் வரலாற்றில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு என்றும் அழியாத ஒரு மைல்கல்லாகத் திகழ்கிறது.

உசாத்துணை நூல்கள்

  1. பெர்குசன் ஜேம்ஸ்., (1910), “ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியன் அன்ட் ஈஸ்டர்ன் ஆர்கிடெக்சர்”, ஜான் முர்ரே, லண்டன்.

  2. ஸ்டெல்லா கிராம்ரிச்., (1933), “இந்தியன் ஸ்கல்ப்சர்”, மோதிலால் பனார்சிதாஸ் பப்ளிஷிங் ஹவுஸ்.

  3. ஸ்டெல்லா க்ராம்ரிச்., (1946), “தி ஹிந்து டெம்பிள் (தொகுதிகள் 1, 2)”, கல்கத்தா பல்கலைக்கழகம்.

  4. ஸ்டெல்லா க்ராம்ரிச்., (1953), “திராவிட அன்ட் கேரளா இன் தி ஆர்ட் அஃப் ட்ராவன்கோர்”, ஆர்ட்டிபஸ் பப்ளிஷர்ஸ் அஸ்கோனா, சுவிட்சர்லாந்து.

  5. ஸ்டெல்லா க்ராம்ரிச்., (1981), “தி பிரசன்ஸ் ஆஃப் சிவா”, பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ்.

  6. ராம் ராஸ்., (1834), “எஸ்சே ஒன் தி ஆர்க்கிடெக்சர் ஆஃப் தி ஹின்டஸ்”, ராயல் ஏசியேட்டிக் சொசைட்டி.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    சாய்ந்தமருது அபிவிருத்தி திட்டங்கள் புறக்கணிப்பு: இருளில் மூழ்கும் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா!

    July 17, 2026

    கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்

    July 17, 2026
    Editors Picks

    மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

    July 17, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026

    லங்கா ப்ரீமியர் லீக் (LPL): ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ அணியின் உரிமையாளர் கைது – பெரும் பரபரப்பு!

    July 17, 2026

    மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் இயக்குநருடன் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

    July 17, 2026

    இந்து கோயில் கட்டிடக்கலையை ஆவணப்படுத்துவதில் ஸ்டெல்லா கிராம்ரிஷ்ஷின் பங்களிப்பு

    July 17, 2026

    அதிக விலை மற்றும் காலாவதியான பொருட்கள்: காலி முகத்திடலில் வியாபாரிகள் மீது நடவடிக்கை

    July 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.