போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெருமளவு பணத்தைச் சம்பாதித்து, சொத்துக்களைக் கொள்முதல் செய்த சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணே, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொடர்பாகக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி பெறப்பட்ட முறைப்பாடு, மேலதிக விசாரணைக்காகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகநபருக்குச் சொந்தமான சட்டவிரோத சொத்துக்கள் குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அத்துடன், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த சொத்துக்களை முடக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பகுதி: 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8.66 பேர்ச்சஸ் காணிவங்கி வைப்புகள்: 06 வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டிருந்த 59 இலட்சம் ரூபாய் பணம்
கொழும்பு 14 பகுதி:
225 இலட்சம் ரூபாய் பெறுமதியான 03 வர்த்தகக் கடைகள்
75 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேலும் ஒரு கடை
200 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று மாடி வீடொன்றுடன் கூடிய காணி
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இச்சொத்துக்கள் அனைத்தும் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சட்டவிரோதப் பணத்திலேயே வாங்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
