எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிறைவடையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எழுதிய “யுத தெக்கட உர தீ” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2028 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இலங்கை மீண்டும் வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். இதற்காக, நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இந்த வருட இறுதிக்குள் கையிருப்பு 8 பில்லியன் டொலர்களாக இருக்கும் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது. அவ்வாறாயின், மேலதிகமாக 6 பில்லியன் டொலர்களைத் திரட்ட வேண்டிய சவால் எமக்குள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எனவே, அந்த 6 பில்லியன் டொலர்களைத் தேடுவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக வகுக்க வேண்டியது அவசியம் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் வலியுறுத்தினார்.
