நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மாயம்: நேபாளத்தின் ரசுவா (Rasuwa) பகுதியில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி, 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர் விவரம்: மாயமானவர்களில் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், 54 அமெரிக்கர்கள், 33 பிரித்தானியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட நேபாள நாட்டவர்களும் அடங்குவர்.
திபெத் எல்லை நிலைமை: இந்த அனர்த்தத்தில் திபெத் பகுதியில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 265 பேரைக் காணவில்லை என சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காரணம் பற்றிய அறிவிப்பு: ஆரம்பத்தில் நிலநடுக்கம் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும், பெரும் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாகவே நில அதிர்வும் அதைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இந்த திடீர் பேரழிவு காரணமாக ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் மூழ்கியுள்ளதாக நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
நேற்று ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அப்பகுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெள்ளத்தின் சீற்றத்தால் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பாரிய உட்கட்டமைப்புகளும் பலத்த சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
