நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்துள்ளது.
கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் குறித்து ஜனாதிபதி தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவூட்டிய அவர், இந்தச் சவாலான தருணத்தில் இலங்கை எப்போதும் நேபாள மக்களுடன் உறுதியாக நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிஷிர் கனாலுடன் தொலைபேசியில் கலந்துரையாடி இலங்கையின் இரங்கலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக எதிர்காலத்தில் வழங்கக்கூடிய மேலதிக ஒத்துழைப்புகள் குறித்தும் இலங்கை அரசு கவனம் செலுத்தி வருகிறது.
