நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேபோன்று, ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சூரியனின் உச்ச நிலை
சூரியனின் தென்திசை நோக்கிய சார்பு இயக்கம் காரணமாக, ஓகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 07ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுத்து வருகின்றது.
இதற்கமைய, இன்று நண்பகல் 12.10 அளவில் கல்பிட்டி, தலாவ, சிங்காரகம, கல்கடவல, நாச்சதுவ, படிகாரமடுவ, கோமரன்கல்ல மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது.
