இலங்கையின் நகரப் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து சேவைக்கு வசதிகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மூன்றாவது டிப்போ முற்றம் ஜா-எல, ஏகலயில் நேற்று (09) முதல் தனது செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன அவர்களின் தலைமையில், தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த அவர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.
மெட்ரோ பேருந்து திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக சேவைகளை ஆரம்பித்துள்ள இந்த டிப்போவை மையமாகக் கொண்டு, 20 புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் ஏகலயிலிருந்து கொழும்பு மாவட்டத்தின் தலங்கம வரை செல்லும் இந்த மெட்ரோ பேருந்து பாதை 29.9 கிலோமீட்டர் நீளமுடையதாகும். இதில் 21 மெட்ரோ பேருந்து நிறுத்தங்கள் நிறுவப்பட்டுள்ளன.
