தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
கனமழைக்கு மத்தியில் இடம்பெற்ற விபத்தால் அவிசாவளை வீதியூடான போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு.
ஹட்டனில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) அரச பேருந்து மீது, எதிர்த்திசையில் வந்த பார ஊர்தி (லொரி) ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று பெய்த கனமழைக்கு மத்தியில் அவிசாவளைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பார ஊர்தி மோதியதில் பேருந்திற்குப் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் எவருக்கும் எவ்வித காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நிலவும் மோசமான வானிலை மற்றும் வீதியில் விபத்துக்குள்ளான வாகனங்கள் குறுக்காக நின்றுள்ளமையால், அப்பகுதியூடான வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பாதிப்படைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
