ஸ்ரீ சத்தியா சாய் வித்யாநிலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவய்களுக்கான பட்டமளிப்பு விழாவும் நேற்றைய தினம் (05) தலவாக்கலை கதிரேசன் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. வித்யா நிலயத்தின் அதிபரான கே.உமாதர்ஷினி, குறித்த கல்வி நிலைய இயக்குநரான வைத்தியர் கருணை தாசன் ஆகியோர் தலைமை தாங்கிய இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அரவிந்தகுமார் கலந்துக்கொண்டார்.
மாணவர்களின் அணிவகுப்போடு ஆரம்பமான இந்நிகழ்வில் வித்யாநிலைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேலும் குறித்த பரிசளிப்பு நிகழ்வில் அரங்கேற்றப்பட்ட ஆசிரியர்களின் நாட்டிய நாடகம் பலரையும் கவர்ந்ததோடு சிறப்பு விருந்தினரால் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்வில் சத்ய சாய் பாபா ஆலயத்தின் அம்மையார் அவர்களும், சென்மேரிஸ் தேவால அருட்சகோதரி, தொழிலதிபர்கள், அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீ சத்யா சாய் வித்யாநிலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி இராஜாங்க அமைச்சரால் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதோடு பாடசாலையின் ஆசிரியர்களும் அதிபர்களும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
– ராசையா கவிஷான் –