(அந்துவன்)
தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து (4) மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார்.
அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளதாக கூறும் பொலிஸார், பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம், அது மீட்கப்பட்ட குறித்த இடத்தில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.