*வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*
மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதார நிலையையும் உயர்த்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார்.
ஹட்டனில் (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் அசோக கருணாரத்ன ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.
இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையை எதிர்கொண்டிருந்தது. பாரிய கடன் சுமைகளுக்கு மத்தியிலும் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதுடன், மக்களுக்கு வழங்கிய ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக, 203 வருடகால வரலாற்றைக் கொண்ட மலையக மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். கடந்த காலங்களில் மலையக மக்களின் சம்பள உயர்வு, வீடமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்து வந்தன. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குப் பதிலாக, தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கி அரசியல் இலாபம் தேடும் அணுகுமுறையே நீடித்து வந்தது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளுடன் நின்றுவிடாமல், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நடைமுறை வேலைத்திட்டங்கள் ஊடாக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்களிப்பாக 200 ரூபாவும், அரசாங்கத்தின் திறைசேரியிலிருந்து மேலும் 200 ரூபாவும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்காக மேலும் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு ஒரு வருடத்துடன் முடிவடையும் என சில மலையக அரசியல்வாதிகள் முன்வைத்த விமர்சனங்களுக்கும் அரசாங்கம் தனது அடுத்தகட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாகப் பதிலளித்துள்ளது. கடந்த காலங்களில் சிறிய சம்பள உயர்வைக்கூடப் பெற்றுக்கொள்வதற்காகத் தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டியிருந்தது. அந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் நேரடியாக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், தோட்டங்களில் பணியாற்றும் பெண்களின் சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மலசலகூடம், தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்காக 3,000 மில்லியன் ரூபாவும், தேயிலைத் துறையின் அபிவிருத்திக்காக 13,000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக 30,000 மில்லியன் ரூபாவும், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 8,500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறைக்காக 700 மில்லியன் ரூபாவும், வீடமைப்புத் திட்டங்களுக்காக 2,800 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் 1,300 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், டித்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காக மாவட்டச் செயலகத்தின் ஊடாக 3,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சமூக சக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக சிறிய வீதிகளைப் புனரமைத்தல், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் குடும்ப வருமானத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மலையக மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாம் மறுக்கவில்லை. சம்பள அதிகரிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் நீண்டகாலத் தீர்வுகள் அவசியம். அதற்கமையவே சுயதொழில் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய முடியுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய வேண்டியவை அல்ல. அவை 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். தற்போதைய முன்னேற்றத்தின் அடிப்படையில் சுமார் 80 வீதமான பணிகளை நிறைவு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.
மேலும், மலையக மக்களின் பெயரால் பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வந்த சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இன்று அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். உண்மையிலேயே கடந்த காலங்களில் அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, மலையகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை முறையாக அபிவிருத்தி செய்திருந்தால், இன்று இந்தப் பிரச்சினைகள் இவ்வளவு பாரிய அளவில் தொடர்ந்திருக்காது.
மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குப் பதிலாக, அரசாங்கத்தை விமர்சிப்பதையும் இனவாதத்தையும் தூண்டி அரசியல் இலாபம் தேடுவதையும் சிலர் தங்களது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பதை விடுத்து, மலையக மக்களின் உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்காக அவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது மலையக மக்கள் என வேறுபாடின்றி அனைத்து மக்களுக்குமான அரசாங்கமாகச் செயற்படுகின்றது. அரசியல்வாதிகளின் சலுகைகளுக்கு முன்னுரிமை வழங்குவதை விட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதே எமது அரசாங்கத்தின் அணுகுமுறையாகும்.
மலையக மக்களும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விழிப்புடன் இருப்பதுடன், தங்களுக்கான உரிமைகள், வீடமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அரசியல் வாக்குறுதிகளை மட்டும் நம்பி வாழ்ந்த காலம் மாறி, நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் மூலம் தங்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும் காலமாக இது அமைய வேண்டும்.
மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான அபிவிருத்திப் பயணம் தொடரும். எனவே, எதிர்க்கட்சிகளின் அரசியல் விமர்சனங்களால் திசைதிரும்பாமல், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இந்த அபிவிருத்திப் பயணத்தில் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி மேலும் தெரிவித்தார்.
க.கிஷாந்தன்
