மஹேஸ்வரி விஜயனந்தன்
பல வரலாற்றுச் சிறப்புகளையும் அனைவரையும் கவரும் இயற்கை அழகுகளையும் தன்னகத்தே கொண்டதாகவும் மலையகத்தின் தலைநகரமாகவும் விளங்கும் கண்டி மாநகரம் மட்டுமின்றி அதனை அண்மித்த பிரதேசங்களும் அனைவரையும் எப்போதும் கவர்ந்த பிரதேசமாகும்.
பொதுவாகவே இலங்கையின் பிரதான நகரங்கள் மற்றும் அதனை அண்மித்த உப நகரங்கள் எப்போதும் தூய்மையாகவே காணப்படும். ஆங்காங்கே சில பிரதான நகரங்களில் இது விதிவிலக்காகக் காணப்பட்டாலும் பெரும்பாலான நகரங்கள் காலை வேளைகளில் தூய்மையாக காணப்படுவதானது எமது நாட்டின் உள்ளூராட்சி நிறுவனங்களின் சிறப்பான நிர்வாகத்தை எடுத்தியம்புவதாக அமைகிறது.
ஏனெனில் நகரங்களை தூய்மையாக வைத்திருக்கும் பணி, அந்தந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் தலையாய கடமை என்பதுடன், இதற்காகவே அனைத்து நகரங்களிலும் நகர சுத்திகரிப்பாளர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்கள் காணப்படுவர்.
இவர்களின் முக்கிய பணி நகரையும் அதனை சார்ந்த பகுதிகளையும் தூய்மையாக வைத்திருப்பது என்றாலும் இம்மக்களின் குடியிருப்புகள் மற்றும் அதனை சார்ந்த பிரதேசங்கள் பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகளின்றி அசுத்தமாக மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்ற குடியிருப்புத் திட்டங்களாகவே காணப்படும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.
இவ்வாறு மத்திய மாகாணத்தின் தலைநகரமான கண்டி நகருக்கு அருகில் பலராலும் பல்வேறு புறக்கணிப்புக்கு உள்ளான பகுதியாக காணப்படும் நித்தவல பிரதேசமானது, கண்டி மாநகர சபைக்குட்பட்டதும் மாவில்மட கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட சுமார் 600க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட பகுதியாகக் காணப்படுகின்றது.
இந்தப் பகுதி “கண்டி நகரசபை தொழிலாளர் குடியிருப்பு திட்டம்“ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டாலும் கண்டி மாநகரசபையின் புறக்கணிப்புக்கு பல்வேறு தருணங்களில் உள்ளாகிய உள்ளாகி வரும் பிரதேசமாகும்.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அடிமைகளில் அதாவது இந்திய வம்சாவளித் தமிழ்க் குடும்பங்களுள் 5 குடும்பங்கள் மாத்திரம் நித்தவெல பகுதியில் பிரித்தானியர்களால் குடிசைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர் என அறியக் கிடைத்தது.
அதாவது இவர்கள் கண்டி நகரத்தில் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்வதற்காகவே அங்கு குடியமர்த்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அன்று 5 குடும்பங்களாக காணப்பட்ட இப்பிரதேசம் இன்று 200 வருடங்கள் நிறைவில் 5 குடும்பங்கள் 167 குடும்பங்களாக பல்கிப் பெருகியுள்ளதால் இவர்களின் அடிப்படை வசதிகளுக்கான தேவைகளும் அதிகரித்துள்ளன.
இப்பிரதேசத்தில் 3 அல்லது 4 குடும்பங்களைத் தவிர ஏனைய அனைவரும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களாகவே காணப்படுகின்றனர்.
இவர்கள் நகரை அண்மித்து உள்ளதாலும் நகர தொழிலாளர்கள் வசிக்கும் இடமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இவர்களுக்கான பல வாய்ப்புகள் அவர்களின் அடையாளங்களால் மறுக்கப்படுவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மாணவர்களின் கற்றல் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அதாவது தொடர்குடியிருப்பு லயன் போன்ற அமைப்பில் எவ்வித வசதியுமின்றி இவர்களுக்கான வீடமைப்புத் திட்டம் அப்போதைய ஜனாதிபதி சஜித் பிரேமதாசவால் அமைத்துக்கொடுக்கப்பட்டாலும் அதற்கான உறுதிப்பத்திரம் என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
எவ்வாறெனின் இந்த நித்தவல பகுதிக்கு அருகில் இரண்டு பிரபல பாடசாலைகள் காணப்படுகின்றன.
எனவே இவர்கள் தமது பிள்ளைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலை மற்றும் புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலையை அதிகம் நாடுகின்ற போதிலும் பல்வேறு காரணங்களால் அந்த வாய்ப்பு பறிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
உடை, உறையுள், வீடு என்பன தான் ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையானவை. ஆனால் அந்த நித்தவெல மக்களுக்கு ஒன்றரை பேர்ச்சஸில் தொடர் குடியிருப்பு ஒன்று எவ்வித வசதிகளும் இன்றி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த 167 குடும்பங்களுக்கும் 20 பொது கழிப்பறைகள் அமைத்துக்கொடுக்கப்பட்ட நிலையில்,
நாளடைவில் இப்பிரதேச மக்களுள் பலர் தமது தேவைகளுக்கு ஏற்ப தமது வீடுகளை திருத்தி புனரமைப்பு செய்து கழிவறைகளை சொந்தமாக அமைத்துக்கொண்டாலும் அங்கிருக்கும் 18 குடும்பங்கள் இந்த வசதிகளற்ற உரிய பராமரிப்பற்ற பொது கழிப்பிடங்களையே இன்றும் பயன்படுத்தி வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
தாம் பல தரப்பினராலும் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த பகுதியைச் சேர்ந்த பலர் அரசாங்கத் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதுடன், மாணவர்கள் உயர்தரம் மற்றும் சாதாரணத் தரத்துடன் இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை இப்பிரதேசத்தில் குறைவாகவே காணப்படுகின்றது.
அதாவது இந்த மக்களின் பிரதான பிரச்சினையாக இருப்பது தமது வீடுகளுக்கான உறுதிப் பத்திரம் இன்மை என தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு பாடசாலைக்கு சேர்க்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்த அம்மக்கள் தமது வங்கிக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் பாரிய பிரச்சினை ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் தமது சொந்த முயற்சி, உழைப்பால் தமக்கான நீர், மின்சார வசதிகளையும் தமக்கான தனியான கழிப்பறைகளையும் அமைத்துக்கொண்டாலும் குறித்த பகுதியிலுள்ள 167 குடும்பங்களில் 18 குடும்பங்கள் தற்போதும் கண்டி மாநகர சபையால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு குறைபாடுகளுடன் காணப்படும் பொது கழிப்பறையையே பயன்படுத்துகின்றமை கவலைத் தரும் விடயமாகும்.
தனி கழிவறையை பயன்படுத்துபவர்களுக்கிடையே தோல் நோய், தொற்று நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் போது, தூய்மையற்ற பொது கழிப்பறையைப் பயன்படுத்தும் இவ்வாறானவர்கள் எவ்வாறான நோய்களுக்கு உள்ளாவார்கள் என்பதை சிந்திக்கத் தூண்டுகிறது.
2017, 2018ஆம் ஆண்டுகளில் இம்மக்களுக்கு தொடர்மாடி வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் முன்வந்த போதும் தமக்கு தொடர்மாடி வீடுகள் வேண்டாம் என தெரிவித்த அம்மக்கள் தாமாகவே ஒரு வீட்டுத் திட்ட யோசனையை முன்வைத்துள்ளனர் .
இதனை 2018ஆம் ஆண்டு அப்போதைய வீடமைப்பு அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு இந்திய அரசாங்கத்தால் 1037 மில்லியன் ரூபாயை ஒதுக்கி அதில் முதற்கட்டமாக 600 மில்லியனை வழங்கிய போது, இந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு வீடமைப்புத் திட்டம் ஒரு கேடா என எண்ணிய சில அதிகாரிகள் இதற்காக ஒதுக்கப்பட்ட 1037 மில்லியன் ரூபாயை ஒரே நேரத்தில் வழங்கினால் மாத்திரமே இத்திட்டத்தை தொடங்க முடியும் என அடம்பிடித்ததால் அத்திட்டம் இறுதியில் கைவிடப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் அரசாங்கத்திலிருந்தோ அரச சார்பற்ற நிறுவனங்களிலிருந்தோ எவ்வித நிவாரண உதவிகளும் இம்மக்களுக்கு கிடைக்கவில்லை. மாறாக இவர்களது பிரதேசத்தை அண்மித்துள்ள பகுதிகளுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளமையானது சமாதான பன்மைத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறதை அவதானிக்கலாம்
இதேவேளை இப்பிரதேச மக்கள் தமிழர்களாக காணப்பட்டாலும் இவர்களின் பிள்ளைகளை சிங்கள மொழியில் கற்பிப்பதிலேயே அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர். அதாவது பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு பாடசாலையில் இலகுவாக இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் சிங்கள மொழியில் கற்பதால் மாத்திரமே தமது பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பு உள்ளதாக இம்மக்கள் நம்புகின்றனர்.
அத்துடன் இந்தப் பகுதி பலராலும் புறக்கணிக்கப்பட்டாலும் இங்குள்ள அனைத்து மாணவர்களும் கற்றல் நடவடிக்கையில் உயர் இடத்திலும் பலர் அரசாங்கத் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர்.
என்றாலும் இவர்களது குடியிருப்பைக் காரணம் காட்டி இவர்கள் பல இடங்களில் நகைப்புக்குள்ளாக்கப்படுவதுடன், கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றால் பொலிஸாரின் முதற் சந்தேகப் பார்வை இந்தப் பகுதி மக்களை நோக்கியே திரும்புவதாகத் தெரிவிக்கின்றனர்.
அதேப்போல் அடிக்கடி தமது பகுதிக்கு போதைப் பொருள் தொடர்பான சுற்றிவளைப்பையும் பொலிஸார் நடத்துவதாகத் தெரிவித்தனர்.
மேலும் இந்தப் பிரதேசத்தின் பிரதிநிதியாக கண்டி மாநகரசபைக்கு உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சபையில் அவர் தம் மக்கள் தொடர்பில் உரையாற்றும் போது பல்வேறு சவால்களுக்கு உள்ளாகியிருந்ததாகத் தெரிவித்தார்.
தனக்கு தனது மக்களின் பிரச்சினைகளை கூற வழங்கிய வாய்ப்பு அரிதென தெரிவித்த அவர், அவ்வாறு வழங்கப்பட்டாலும் தான் கூறுவதை எவரும் செவிமடுக்க தயாரில்லை என்றும் தான் தெரிவு செய்யப்பட்ட நித்தவல பிரதேசத்தின் பெயரை கூறி அவமானப்படுத்தப்பட்டதான சந்தர்ப்பங்கள் பல உள்ளன என்றும் தெரிவித்தார். இது சமாதான பன்மைத்துவத்துக்கான பிரச்சினையாகவே காணப்படுகின்றது.
மற்றுமொரு விடயமாக இந்தப் பகுதிக்கென அரசாங்கத்தால் சிறுவர் ஆரம்ப பாடசாலையொன்று அமைத்து கொடுக்கப்பட்டு, அதில் கற்பிப்பதற்கு சிங்களமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு பெற்றோர் காட்டிய எதிர்ப்பு காரணமாக அச்சிறுவர் பாடசாலை கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அதாவது தமிழ் மொழி பேசுபவர்களை பெரம்பான்மையாகக் கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 40 சிறார்களின் ஆரம்ப கல்வி அவர்களது தாய் மொழியில் கற்கும் உரிமை இல்லாமல் போனதாகவும் தெரிவிக்கின்றனர்.
நித்தவல பிரதேசத்தில் விளிம்பு நிலை மக்களின் பொருளாதார சிக்கல்கள்
அடுத்ததாக இக்கட்டுரையில் விளிம்பு நிலை மக்களின் பொருளாதார சிக்கல்கள் குறித்து பார்ப்போமானால் இந்த பிரதேச மக்கள் அனைவரும் அவர்களின் குடியிருப்புத் திட்டம் மற்றும் தொழில்சார் ரீதியில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் விளிம்புநில மக்களாகவே பார்க்கப்படும் நிலையில் அவர்களுள் பெண் தலைமைத்துவ குடும்பங்களை விசேடமாக விளிம்புநிலை என அழைக்கும் போது குறித்த பிரதேசத்தில் பெண்ணொருவர் சிற்றுண்டி உணவுகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தனது தயாரிப்புகளை நகரத்துக்கு தனது கணவரிடம் அனுப்பி விற்பனை நடவடிக்கையில் ஈடுபடும் இவர், குறித்த பகுதியைச் சேர்ந்த 7 பெண்களுக்கு தனது உற்பத்தி தொழிலில் வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளமை சிறப்பம்சமாகும்.
இந்த சிற்றுண்டி உற்பத்தியை தனது ஒன்றரை பேர்ச்சஸ் வீட்டிலேயே தயாரிக்கும் இவர் குறித்த 7 பெண்களுக்கும் தலா 700 ரூபாய் நாட்கூலியையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.
தற்போதைய பொருள்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் தமது சிற்றுண்டி தயாரிப்புக்கான பொருள்களை கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கும் இப்பெண், தமது அன்றாட தயாரிப்புகளால் பெரிதளவு இலாபத்தை விட நட்டமே கிடைப்பதாகவும் அன்றாட தேவைகளுக்கு மாத்திரமே இந்த உணவுத் தயாரிப்பு மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
எனவே இந்தப் பெண்களின் தற்போதைய பொருளாதார சிக்கல்கள் குறித்து ஆராய்வோமானால் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியானது நாட்டின் பெரிய தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதாளத்துக்குள் தள்ளியுள்ள நிலையில் தினக் கூலிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இப்பெண்களையும் இப்பொருளாதார சிக்கல் அதாள பாதாளத்துக்குள் தள்ளியுள்ளது.
அதாவது கொரோனா தொற்று அதற்கு பின்னரான பொருளாதார சிக்கல்களுக்கு முன்னரும் இவ்வாறே சிற்றுண்டித் தயாரிப்பில் ஈடுபட்ட இப்பெண்கள், தமது தயாரிப்புகளை 3 தள்ளுவண்டிகளில் மாலை நேரம் விற்பனைக்கு அனுப்பி வந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஒரேயொரு தள்ளுவண்டியில் மாத்திரமே விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
எனவே சிறு அறையொன்றில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 7 பெண்களுக்கு தொழில் வாய்ப்ப்பை வழங்கியுள்ள இந்தப் பெண்ணுக்கு பரந்த இடவசதியுடனான கட்டடமும் இவர்களின் தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான விடயங்களும் முன்னெடுக்கப்படுமாயின் இன்னும் 70 பெண்களுக்கான தொழில் வாய்ப்பு இங்கு வழங்க முடியும்.
மாத்திரமின்றி பொருளாதார நெருக்கடியால் தமது தயாரிப்புகள் சில நாட்களில் ஓரளவுக்கேனும் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படுவதாகவும் அப்போது மிகுதிப்படும் சிற்றுண்டிகளை வீசும் நிலை ஏற்படுவதாகவும் இவர்கள் தெரிவிக்கும் நிலையில், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள், நிகழ்வுகள் போன்றவற்றிட்கு இப்பெண்கள் தயாரிக்கும் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்ய ஏற்பாட்டாளர்கள் முன்வருவார்களாயின் அது இவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவலாம்.
இது மாத்திரமின்றி இந்த பிரதேசத்தில் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ், 300க்கும் மேற்பட்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடிச் சென்றுள்ளதுடன், மேலும் பல பெண்கள் தாம் இதுவரை செய்து வந்த தொழிலுக்கு மேலதிகமாக வேறு பல தொழிகளிலும் பகுதி நேரம் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையானது அவர்கள் ஓய்வு நாட்களிலும் குடும்பம், பிள்ளைகளுடன் நேரத்தை கழிக்காமல் ஓய்வு நாட்களிலும் கிடைக்கும் தொழில்களைச் தேடிச் செல்லும் நிலைக்கு இந்த பொருளாதார சிக்கல் தள்ளியுள்ளது.
இவர்களின் நிலை இவ்வாறு காணப்படுகையில் இப்பிரதேசத்தில் உள்ள சிறார்களின் உணவு விடயமும் மாற்றமடைந்துள்ளது. பொருளாதார சிக்கலால் பிள்ளைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் இறைச்சி, மீனை உணவாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு நாள் மாத்திரமே இறைச்சி, மீனை உணவாக தமது பிள்ளைகளுக்கு வழங்குவதாகத் தெரிவிக்கும் பெற்றோரும் இந்தப் பிரதேசத்தில் வாழ்கின்றனர்.
எனவே நாட்டின் தற்போதைய பொருளாதார சிக்கலானது, கண்டி- நித்தவல பகுதி மக்களையும் பாரிய அளவில் தாக்கமடையச் செய்துள்ளதை அவதானிக்கலாம்.
எனினும் பொருளாதார சிக்கல் ஒரு புறம் இருந்தாலும் தமது பிள்ளைகளுக்கான கல்வி கற்கும் உரிமையை உறுதிச் செய்வதற்கு அவர்களை பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளும் போது ஏற்படும் சவாலான வீட்டு உறுதிப்பத்திரமே இப்பிரதேச மக்களின் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
இந்த பிரச்சினை தொடர்பில் கண்டி மாநகர சபை ஆணையாளரிடம் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு நாம் வினவியபோது, இந்தப் பகுதி மக்களின் முக்கிய பிரச்சினையாக இந்த காணி உறுதிப்பத்திரம் விளங்குவதாகவும் இதற்கு தற்காலிக தீர்வு ஒன்றை வழங்கவுள்ளதாகவும் அதாவது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கும் போது தனது கையொப்பத்துடனான கடிதம் ஒன்றை வழங்கி தற்காலிக தீர்வு வழங்குவதாகத் தெரிவித்ததுடன், இதற்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே குறித்த பிரதேசத்தில் சிறுபான்மையினராகவும் விளிம்பு நிலை மக்களாகவும் காணப்படும் நித்தவல பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கைகளுள் பிரதானமான தமது பிள்ளைகளுக்கான கல்வி கற்கும் உரிமையை எமக்கு உறுதியளித்த தரப்பினர் நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் கல்வியால் மாத்திரமே ஒரு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே இப்பிரதேச பிள்ளைகளுக்கு கற்றல் உரிமைகள் வழங்கப்படுவதன் ஊடாக இவர்கள் விளிம்புநிலை மக்கள் என்ற அடையாளத்திலிருந்து வெளியே வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்.