வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, அருள்மிகு சிந்தாமணி விநாயகர் திருக்கோயில்

நாற்றிசையும் அருள்பரப்பி நன்மைகளைச் செய்துவிடு
நாளும் உடனிருந்து நிம்மதியைத் தந்துவிடு
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களை நீ காத்துவிடு
வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே

வளங்கொண்ட வன்னியிலே கோயில் கொண்ட விநாயகரே
வரும் துன்பம் தடுத்துவிடு வல்லமையைத் தந்துவிடு
அடிபணிந்து தொழும் எமக்கு ஆறுதலைத் தந்துவிடு
வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே

வடஇலங்கை கோயில் கொண்டு வழித்துணையாய் இருப்பவரே
வற்றாத கருணையினை எமக்கென்றும் ஆக்கிவிடு
வெற்றிகளைத் தந்தெம்மைத் தலைநிமிரச் செய்துவிடு
வரம் கேட்டு நிற்கும் எமக்கு வளவாழ்வைத் தந்துவிடு
வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே

தமிழ் ஒலிக்கும் நம் மண்ணில் காட்சி தரும் பெருமானே
தெளிவான வழியை நீ எமக்கென்றும் காட்டிவிடு
தவறான செயல்களைத் தடுத்தெம்மை வழிநடத்து
வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே
திக்கின்றித் தவிப்போர்க்கு வழிகாட்டும் நாயகனே
நேர்வழியைக் காட்டிவிடு நிலைத்த நலம் தந்துவிடு
தடுமாறா நிலைதந்து உரிய வழி நடத்திவிடு
வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே
கேட்கும் வரம் தந்தெம்மை ஆட்சி கொள்ளும் பேரருளே
தொல்லையில்லா நல்வாழ்வை எமக்கென்றும் தந்துவிடு
இன்பநிலை தந்துவிடு என்றும் உடன் இருந்துவிட்டு
வவுனியாவில் வீற்றிருக்கும் சிந்தாமணி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
