இங்கிலாந்து – இலண்டன், ஸ்ரோன்லி அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயில்

வளங்கொண்ட பெருநாட்டில் கோயில் கொண்ட பேரருளே
வற்றாத கருணையினைப் பொழிந்திடவே வாருமம்மா
குற்றங்கள் பொறுத்து நம்குலம் காக்க வேண்டுமம்மா
இலண்டன் மாநகரில் இருந்தருளும் இராஜேஸ்வரி அம்மா துணையிருப்பாய்

கருணையுள்ளம் கொண்டருளும் கண்மணியே பேரருளே
காத்து நலமளித்து காவல் செய்ய வாருமம்மா
நிலைகுலையா நிம்மதியை அருளிடவே வேண்டுமம்மா
இலண்டன் மாநகரில் இருந்தருளும் இராஜேஸ்வரி அம்மா துணையிருப்பாய்

ஆற்றல் தந்து அரவணைத்து ஆட்கொள்ளும் பேரருளே
அச்சம் அகற்றி யென்றும் தலை நிமிர்த்த வாருமம்மா அஞ்சாத மனவுறுதி தந்தருள வேண்டுமம்மா
இலண்டன் மாநகரில் இருந்தருளும் இராஜேஸ்வரி அம்மா துணையிருப்பாய்

தேரேறிப் பவனி வந்து அருள் பொழியும் பேரருளே
தோல்வியில்லா நிலை தந்து உயர்த்திவிட வாருமம்மா
தொல்லையில்லா நல்வாழ்வு தந்தருள வேண்டுமம்மா
இலண்டன் மாநகரில் இருந்தருளும் இராஜேஸ்வரி அம்மா துணையிருப்பாய்
தாயாக இருந்துலகைத் தாங்கி நிற்கும் பேரருளே
தெளிவான அறிவு தந்து ஆற்றல் தர வாருமம்மா
திக்கெட்டும் தமிழ் முழங்க வழியமைக்க வேண்டுமம்மா
இலண்டன் மாநகரில் இருந்தருளும் இராஜேஸ்வரி அம்மா துணையிருப்பாய்
வீரம், செல்வம், கல்வி அளித்தருளும் பேரருளே
வெற்றி பெற்று நாம்வாழ வழியமைக்க வாருமம்மா
உயர்கல்வி பெற்று என்றும் உன்னதமாய் இருக்க அருள்தர வேண்டுமம்மா
இலண்டன் மாநகரில் இருந்தருளும் இராஜேஸ்வரி அம்மா துணையிருப்பாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
