சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி, திருவானைக்கட்டி, அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்

திருவானைக் கட்டியில் கோயில் கொண்ட வேலவனே
திசையெங்கும் நலமருளி வாழ வைக்கும் திருக்குமரா
பயங்கள் தரும் தீவினைகள் அகற்றிடவே வந்திடைய்யா
இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே
போற்றி நிற்கும் அடியவர்க்கு காவல் தரும் வேலவனே
ஏற்றியுந்தன் தாள் பணியும் இதயங்களில் உறை திருக்குமரா
ஆற்றல் தந்து அரவணைத்துக் காத்திடவே வந்திடைய்யா
இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே

துன்பம் வரும் போது துணையிருந்து போக்கிவிடும் வேலவனே
நம்பியுந்தன் அடிபணிவோர் நலன்காக்கும் திருக்குமரா
திடமனது தந்து எம்மைத் தலைநிமிர்த்த வந்திடைய்யா
இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே
வீணர்களின் தீச்செயல்கள் பொசுக்கிவிட விரைந்து வரும் வேலவனே
வாழ்வின் நலன் காத்து வாழவைக்கும் திருக்குமரா
வெற்றிகளைத் தந்தெம்மை வாழவைக்க வந்திடைய்யா
இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே
பெருவீதி மருங்கிருந்து காவல் செய்யும் வேலவனே
பொறுமையுடன் தாள் தொழுவோர் வளம் உயர்த்தும் திருக்குமரா
போதும் என்ற மனம் தந்து நிம்மதி தர வந்திடைய்யா
இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே
தமிழ் மொழியின் திருவுருவாய்க் காட்சிதரும் வேலவனே
தளராத மனவுறுதி தந்தென்றும் உடனிருக்கும் திருக்குமரா
வளம் தந்து அமைதி தர விரைந்து நீ வந்திடைய்யா
இரத்தினபுரி எழுந்தருளும் கதிர்வேலாயுதப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
