மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம்- தெகிவளை அருள்மிகு வெங்கடேசுவரப் பெருமாள் திருக்கோயில்

மாதவனே மாமணியே மலர் மகளின் துணையவனே
மாநிலத்தில் நல்லருளைப் பரப்பிடுவாய் பெருமாளே
உத்தமனே உன்கருணை உலகினையே காத்துவிட
உறுதுணையாய் இருந்திடைய்யா உலகாளும் திருமாலே

கருணைமிகு பேரருளே காத்தருளும் வல்லோனே
கந்தனவன் அம்மானே காத்தருள்வாய் பெருமாளே
வந்தவினை போக்கிவிட வரும் வினைகள் தடுத்துவிட
சிந்தையைத் திருப்பிவிடு செம்மை தரும் திருமாலே

அன்னை மகாலட்சுமியை அருகு கொண்ட திருமகனே
அச்சம் தவிர்த்தெம்மை ஆட்சி செய்வாய் பெருமாளே
அமைதியெங்கும் பரவி நிலைபெற்றுவிட
அருள் பொழிவாய் பேரருளே திருமாலே

பாற்கடலில் துயிலுகின்ற பார்போற்றும் உத்தமனே
பாரினிலே காவல் செய்ய தயக்கமென்ன பெருமாளே
நத்திவரும் உன்னடியார் நல்ல நிலை பெற்றுவிட
நாயகனே அன்புருவே வழிகாட்டு திருமாலே
அதர்மஙகள் அழித்தொழிக்க அவதரிக்கும் மேலோனே அருளளித்து ஆதரித்து அரவணைப்பாய் பெருமாளே
வெஞ்சினத்தின் கொடுமைகளை வேரோடு அகற்றிவிட
வெற்றித் திருமகனே வந்திடுவாய் பெருமாளே
தெகிவளையில் கோயில் கொண்டு திக்கெல்லாம் அருள்வோனே
தேம்பியழும் உன்னடியார் துயர் களைவாய் பெருமாளே
நெடுமாலே நேர்மையனே துயர்களைய வந்திடுவாய் நெடிதுயர்ந்த உன்னருளால் நெஞ்சமெல்லாம் நிறைந்திடட்டும்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
