இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி:20 போட்டியில் நியூஸிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி:20 தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியிருந்தது.
அதன் பின்னர் ஒக்லேண்டில் ஆரம்பமான மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் நியூஸிலாந்தை வீழ்த்தி, சுற்றுப் பயணத்தின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந் நிலையில் டி:20 தொடரின் இரண்டாவது போட்டி டுனெடினில் இன்று ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து, 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக தனஞ்சய டிசில்வா 37 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 35 ஓட்டங்களையும் மற்றும் அசலங்க 24 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பந்து வீச்சில் நியூஸிலாந்து சார்பில் ஆடம் மில்னே 5 விக்கெட்டுகளையும், பென் லிஸ்டர் 2 விக்கெட்டுகளையும், ஷிப்லி, ரச்சின் ரவீந்திரன் மற்றும் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 142 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.
ஆரம்ப வீரராக களமிறங்கிய சாட் போவ்ஸ் 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, டிம் சீஃபர்ட் 79 ஓட்டங்களுடனும், டொம் லதம் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 1:1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் இறுதியும், மூன்றாவதுமான டி:20 போட்டி , குயின்ஸ்டவுனில் ஏப்ரல் 8 ஆரம்பமாகிறது.
