திட்டமிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடாத்த முடியாது என, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்ட தேர்தல் அத்தாட்சி அலுவலர்களால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11ஆம் திகதியிடப்பட்டு குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிவித்தலுக்கமைய, குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வர்த்தானியில்,
மார்ச் 09 ஆந் திகதி தேர்தல்களை நடாத்துவதற்குத் தேவையான நிதியை பொதுத் திறைசேரியிலிருந்து விடுவிக்க முடியாத எதிர்பாராத விடயம் தொடர்ந்து தீர்க்கப்படாமை காரணமாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதியான ஏப்ரல் 25 ஆம் திகதியும் அத்தேர்தல்களை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க வேண்டிவந்துள்ளதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல்களை நடாத்துவதற்குத் தேவையான நிதி பொதுத் திறைசேரியிலிருந்து விடுவிக்கப்படுமென நிச்சயமாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படுகின்ற திகதி அல்லது ஏற்கனவே இத்தேர்தல்களை நடாத்துவதோடு தொடர்புடையதாக உயர் நீதிமன்றத்தின் முன்னால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக வழங்கப்படுகின்ற தீர்ப்புகளுக்கு அமைய தேர்தல்களுக்கான புதிய திகதியொன்றை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அறியத் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
