அரச சேவையின் ஊடாக பொதுமக்களுக்கான சேவையில் தாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அமைச்சு செயலாளர்களின் அதிகாரங்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே அரசாங்க சேவையில் தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், திறமையான சேவையை வழங்குதல் மற்றும் அரசாங்க சேவைக்காக ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நடைமுறையில் உள்ள நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
அமைச்சுக்களின் செயலாளர்களின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான மதிப்பெண் முறையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 65 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் அதே அமைச்சில் தக்கவைக்கப்படுவார்கள், 50 முதல் 65 மதிப்பெண் பெற்றவர்கள் இடமாற்றத்திற்கு பரிசீலிக்கப்படுவார்கள், 50க்கும் குறைவான மதிப்பெண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகாரிகள் மீதான தொடர் நடவடிக்கைகளுக்காக காலாண்டு அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
