வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் – சாவகச்சேரி, மட்டுவில்- அருள்மிகு பன்றித்தலைச்சி அம்மன் திருக்கோயில்

வந்தவரை வாழவைத்து வரும் துன்பம் போக்கிடுவாய்
நத்தியுந்தன் அடி பணிவோர் நலமனைத்தும் தந்திடுவாய்
நிம்மதியாய் நாமென்றும் நிலைபெற்று வாழ்ந்திடவே
மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி
தேடிவந்து பொங்கலிட்டு வழிபடுவோர் துயர் களைவாய்
ஓடிவந்து தொழுது நிற்போர் மனம் மகிழச் செய்திடுவாய்
நாடியுன்னை நோக்கிடுவோர் நலன்கள் பெற்று வாழ்ந்திடவே
மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி
துன்பங்கள் அண்டாமல் காத்தெம்மை வாழவைப்பாய்
இன்பநிலை தந்தெம்மை இனிதாக இருக்கச் செய்வாய்
பண்புடனே நம் வாழ்வு சீராக அமைந்திடவே
மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி
வாழ்வுக்குறுதி தந்து வளமாக இருக்கச் செய்வாய்
வெறுப்பில்லா மனம் தந்து வெற்றிகளை அடையச் செய்வாய்
வெற்றியுடன் வாழ்வு தந்து மனவலிமை பெற்றிடவே
மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி
துணை கேட்டு பணிந்திடுவோர் நம்பிக்கையை உறுதி செய்வாய்
துரத்தி வரும் துன்பங்களைத் தடுத்தே நிறுத்திடுவாய்
அச்சமின்றி அமைதியுடன் நாமென்றும் வாழ்ந்திடவே
மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி
நம்பியுன்னைத் தொழுது நிற்போர் நம்பிக்கையைக் காத்திடுவாய்
நீதிநெறி தவறாது இனிய வாழ்வு தந்திடுவாய்
நேர்மையாய் நம் வாழ்வு நிலை பெற்று வளம் பெறவே
மட்டுவிலில் எழுந்தருளும் பன்றித்தலைச்சி அம்மா உன் தாள் போற்றி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.