மலையக மக்கள் இலங்கையில் காலடி எடுத்து வைத்து இருநூறு வருடங்கள் எட்ட உள்ள நிலையில், பண்பாடும் பாரம்பரியமும் மாறாத மலையகத்தின் ஹட்டன் நகரில் கடந்த டிசம்பர் 6,7 மற்றும் 8ம் திகதிகளில் Organization of inspire People நிறுவனத்தின் அங்கத்தவர்களால் மலையகத்தில் முதல்முறையாக சமகால ஓவிய கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நவீன சமகால ஓவிய நுட்ப முறையை கையாண்டு வரையப்பட்ட மிக துல்லியமான நுட்பம் மிகுந்த ஓவியங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும் இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்களில் எவ்விதமான நிற பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக மலையகத்தின் அடையாளமான தேயிலை சாயத்தை வைத்தே குறித்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் அற்ற மலையகத்தை உருவாக்குவதற்காக இந்த கண்காட்சியில் எவ்விதமான பிளாஸ்டிக் பொருட்களும் கையாளவில்லை, என்பதுடன் அதற்கு பதிலாக சணல் சாக்கு, இதுவரை மலையக மக்களால் பாவனைக்குட்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது, ஒரு சிறப்பு அம்சமாகும். Manipulate for good என பெயரிடப்பட்ட இக்காட்சிக்கு சிறப்பு அதிதியாக UNOPS இன் இயக்குனர் சுரங்க மல்லாவா கலந்து சிறப்பித்துள்ளார்.
மேலும் குறித்த சமகால கண்காட்சி நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், மற்றும் கலைத்துறையில் ஆர்வமிக்க இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியானது மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு கலை இன் மூலம் வெளிப்படுத்துவது என்பதை நுணுக்கமாக கையாண்டு ஒரு வருட ஆராய்ச்சியின் பின் குறித்த குழுவினரால் இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வை ஒழுங்கமைத்த organization of inspire people நிறுவனத்தின் இயக்குனர் கிஷோர்குமார் குறித்த நிகழ்வைப் பற்றி கூறுகையில்
organization of inspire people எனும் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கும் ஓர் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த ஒரு வருட காலமாக மலையகத்தில் பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த ஆய்வுகளின் இறுதியில் பகுப்பாய்வின் மூலமாக நடத்தப்பட்டதே இந்த கண்காட்சியாகும். ஓவியம் என்பது வெறுமனே பார்வைக்கு அழகானது பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே அல்ல ஒரு சமூகத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணருவருவதற்கும் அதன் தீர்வுகளை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் உதவக்கூடிய ஒரு நல்ல ஊடகமே ஓவியம் எனவே அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் ஓவிய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான இடமும், வாய்ப்புகளும், வழிகாட்டுதல்களும்,சந்தர்ப்பமும் (Art gallery)இதுவரை மலையக கலைஞர்களுக்கு ஏற்படுத்தித் தரப்படவில்லை. எனவே எமது சமூகத்தினருக்கு இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். இதன் மூலம் நீண்ட கால சமூக மாற்றத்தை நாம் எதிர்பார்க்கின்றோம். மேலும் குறித்த கண்காட்சியில் நாங்கள் பாலியல் கல்வியின் முக்கியத்துவம், மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடை விலகுதல், தொழில் தகுதியற்ற தொழிலாளர்கள் unskill labours உருவாக்குதல், மற்றும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பற்றியும் ஆய்வின் முடிவுகள் மூலம் நாங்கள் குறித்த கண்காட்சியில் மிக விளக்கமாக காட்சிப்படுத்தியுள்ளோம். மற்றும் இக்கண்காட்சியானது மீள் சுழற்சி பொருட்களை மட்டுமே பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளது. எவ்விதமான நிற பயன்பாடும் இன்றி தேயிலை சாயம் நிறமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இயற்கையை பாதிக்காத சணல் சாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்று கூறியவர் மலையகத்தில் முதல்முறையாக இவ்வாறான கண்காட்சியை செயல்படுத்துவதில் பெரு மகிழ்ச்சி அடைவதோடு இக்கண்காட்சிக்கு உதவிய நிறுவனத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.