கொழும்பில் உள்ள தனியார் இணைய ஊடக நிறுவனம் ஒன்றிலிருந்து எவ்வித முன்னறிவித்தலும், காரணமும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தி முகாமையாளர் கலாவர்ஷினி கனகரட்ணத்திற்கு நேற்று (18) ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி குறித்த நிறுவனத்தின் உயர்மட்ட பதவிகளில் இருந்த சிலரை பணிநீக்கம் செய்த நிறுவனம், அது தொடர்பாக எவ்வித காரணத்தையும் தெரிவிக்கவில்லை. உடனடியாக வேலையிலிருந்து விலக வேண்டும் என அதன் லண்டன் தலைமையகத்தின் பல்வேறு அதிகாரிகளும், கொழும்பு அலுவலகத்தின் அதிகாரிகளும் அழுத்தம் கொடுத்து
அலுவலக அனுமதி, செய்தி பதிவேற்றும் தளத்திற்கான அனுமதி என்பன இரத்துசெய்யப்பட்டு பலவந்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
ஒரு வாரத்தின் பின்னர் குறித்த ஊடக நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், குறித்த நிறுவனம் பாரிய நிதி நெருக்கடியில் உள்ளதாகவும் அதனால் பணிநீக்கம் செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த அநீதியான செயற்பாட்டிற்கு எதிராக கொழும்பு – பொரளை தொழில் நியாயாதிக்கச் சபையில் கலாவர்ஷினி வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அத்தோடு, பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவுசெய்திருந்தார்.
சுமார் 4 வருட காலமாக இந்த வழக்கு இழுபறியில் இருந்த நிலையில், ஒரு மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி குறித்த ஊடக நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதன் பிரகாரம் தொழில் நியாயாதிக்கச் சபையின் தலைவர் முன்னிலையில் குறித்த நட்டஈடு நேற்று வழங்கப்பட்டது.
