நுவரெலியா மாவட்டம் முழுவதும் தற்போது மழைப்பொழிவு குறைந்து, ஒப்பீட்டளவில் சீரான காலநிலை நிலவி வருகிறது. எனினும், மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மேகமூட்டமான சூழ்நிலை நிலவுவதுடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் மொத்தமாக 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தற்போதைய நிலவரப்படி, 20 நலன்புரி முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2,195 பேர் தொடர்ந்து தங்கியுள்ளனர்.
* இது தவிர, உறவினர்களின் வீடுகளில் 224 குடும்பங்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனிடையே, தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வடிந்து வருவதை தொடர்ந்து, முகாம்களில் தங்கியுள்ளவர்களை விரைவாகத் தங்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த நாட்களில் பதிவான அனர்த்த சம்பவங்களில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இவர்களில் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் தொடர்பில் தொடர்ந்து தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவங்களில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
2 வீடுகள் முழுமையாகவும், 90 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதிக மழைப்பொழிவு, பலத்த காற்று, திடீர் வெள்ளப்பெருக்கு, ஆற்றங்கரை இடிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாகவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிரதேச செயலாளர்களின் நேரடித் தலைமையில் அவசரகால நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாகச் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் (RDA) மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து, மண்சரிவுகளால் தடைப்பட்ட பிரதான மற்றும் உழவூர்திப் பாதைகளைச் சீரமைத்து, பொதுப் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அவிசாவளை – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி: 66ஆவது கிலோமீற்றர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்துத் தடைகள் மற்றும் சேதங்கள் அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
* லட்சபானை – பொல்பிட்டிய வீதி: மீளவும் போக்குவரத்துக்கு உகந்த வகையில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
* டன்சினன் – பூண்டுலோயா வீதி மற்றும் டிக்கோயா – பாத்ஃபோர்ட் வேலி வீதி: வீதிகளில் குவிந்துள்ள மண்மேடுகளை அகற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
* கொத்மலை – பனங்கம்மன வீதி: இப்பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்வதால், பாதுகாப்புக் கருதி இந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
