என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றிலும் சரி சமூக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு மாமனிதராக ஆளுமை மிக்க மனிதராக செயல்பட்டவர் எங்களுடைய முன்னாள் அதிபர் திரு சாந்தகுமார் அவர்கள்.
அவர் தன்னுடைய 61வது வயதில் நேற்று இவ்உலகை விட்டு பிரிந்து இருந்தாலும் கூட எம்முடைய பிரதேசத்தின் கல்வி, கலை பண்பாட்டம்சங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவராவார்.
அவருடைய தந்தை திரு முத்தையா அவர்கள் முத்தையா மாஸ்டர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் மலையக நாடகத்துறையில் மிக முக்கியமான ஒரு ஆளுமையாகவும், அவருடைய பிள்ளைகளில் ஒருவரான அதிபர் சாந்தகுமார் அவர்களும் மலையை கலையிலும், கல்வியிலும், சமூக இயக்கத்திலும் தன்னை
ஈடுபடுத்திக்கொண்டார்.
என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் மிக சிறந்த அதிபர்களை காலத்துக்கு காலம் கொண்டு இருந்தாலும் கூட சாந்தகுமார் அதிபர் அவருடைய காலம் பாடசாலையின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலகட்டமாக திகழ்கின்றது.
2001ஆம் காலப்பகுதியில் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பிரதி அதிபராக இருந்து பதவி உயர்வுபெற்று அதிபராக கடமைப் பொறுப்புகளை ஏற்று கல்லூரியின் வரலாற்றில் கல்வித்துறையில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியவராவார்.
எங்களுடைய அதிபர் திரு சாந்தகுமார் அவர்கள் மிகச்சிறந்த அதிபர்,சிறந்த ஆசிரியர் பிறரை நேசிக்கின்ற மனிதநேயர்,பிறரோடு அன்பாக உரையாடக் கூடியவர் எந்நேரமும் சிரித்த முகத்தோடு . அதிபராக வலம் வந்தவர்.
அதிபர் அவர்கள் என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் முறையாக மாணவர் பேன்ட்வாத்தியக் குழுவினை ஆரம்பித்து வைத்த பெருமை இவருக்குரியது.
பாடசாலையில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்குதாரராக இருந்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமையும் அதிபர் சாந்தகுமார் அவர்களையே சாரும்.
அதேசமயம் அவருடைய காலத்தில் மூன்று மாடி கட்டிடத்தின் உருவாக்கம் பாடசாலையினுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.
அத்தோடு விளையாட்டு மைதானம் ஒன்றினை பாடசாலை அருகிலேயே அமைத்து மாணவர்களுடைய விளையாட்டுத் திறனுக்கு மிக முக்கிய பங்களிப்பு செய்தவர்களாக காணப்படுகின்றார்.
இவருடைய காலத்தில் என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் பல்வேறு சாதனைகளை பெறுவதற்கு உந்துசக்தியாக இருந்துள்ளார். குறிப்பாக சக்தி தொலைக்காட்சியினால்
நடத்தப்பட்ட விவாத சொற்சமர் போட்டியில் எம்முடைய என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் விவாதத்தில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று மலையகத்திற்கும் எம்முடைய சமூகத்துக்கும் பெருமையை தேடி தருவதற்கு மிக முக்கிய பங்குதாரராக இருந்து செயல்பட்டவர் எங்களுடைய அதிபர் திரு சாந்தகுமார் அவர்கள்.
அத்தோடு இவருடைய காலத்தில் தான் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் எம் கல்லூரியிலிருந்து உருவாகவும், ஆசிரியர்கள் அதிகமானோர் கல்வியற் கல்லூரிகளுக்கு தெரிவாகவும் காரணமாய் அமைந்தார்.
அத்தோடு க.பொ. சாதாரண பரிட்சையில் 50 வீதத்துக்கு மேற்பட்ட சித்தியிணை பெற துணைநின்றவர்.
மிகச்சிறந்த நிர்வாகியாக காணப்பட்ட இவர் எம்முடைய என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் கலை கலாசாரம் விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மிளிர்வதற்கு காரணமாய் அமைந்தார்.
என்பீல்ட் பாடசாலையில் இருந்து பொஸ்கோ கல்லூரிக்கு அதிபராக பதவி உயர்வு பெற்று சென்று அங்கும் தன்னுடைய ஆளுமை மிக்க நிர்வாகத் திறனை செம்மையாக நிறைவேற்றியவர்.
எமதுபிரதேச பெருந்தோட்டங்களில் நடைபெறுகின்ற கலை விழாக்களில் மேடை அமைப்புக்குரிய திரைச் சேலைகளையும் அதற்குரிய பொருட்களையும் வழங்கியதோடு கலை விழாக்கள் ஊடாக நாடக வடிவங்களை மேன்மைப்படுத்திய மிக முக்கியமான ஆளுமை திரு முத்தையா மாஸ்டர் ஆவார்.அவரோடு இணைந்து அந்தப் பணியை எம்முடைய அதிபர் அவர்களும் மிக செவ்வனே நிறைவேற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எல்லாவற்றுக்கும் மேலாக தான் ஒரு அதிபர் என்பதற்கு அப்பால் அனைவரோடும், தான் வாழ்கின்ற சமூகத்தோடும் சமூகத்தில் உள்ள அனைவரோடும் நெருங்கி பழகுகின்ற அதே வேலை சமூகத்தில் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்வுளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றவராகவும் காணப்படுகின்றார்.
இவருடைய பங்களிப்பு எமது சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கல்வித்துறையிலும் சமூகத்துறையிலும் ஏற்படுத்தி இருந்தது என கூறலாம். இறுதிக்காலத்தில் உதவி கல்விப் பணிப்பாளராக பணியாற்றியதோடு, தான் பிறந்த, தான் நேசித்த தோட்டமான எட்லி தோட்டத்தின் ஆலய புணரமைப்பு வேலைகளிலும் அதன் உருவாக்கத்திலும் மிக முக்கியமான பங்குதாரராக இருந்து தன்னுடைய இறுதி காலம் வரை மிகச் சிறந்த சேவையாற்றியவராக திகழ்ந்தார்கள்.
இவருடைய இழப்பு ஈடுசெய்யமுடியாதது.
அதிபர் அவர்களை இழந்து தவிக்கின்ற அவருடைய மனைவி மற்றும் மகன்மார்கள் அவருடைய குடும்ப உறவிணர்கள் அனைவருக்கும் எம்முடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சாந்தகுமார் அதிபர் அவர்களுடைய காலத்தில் அவருடைய நிர்வாகத்தின் கீழ் நானும் ஒரு மாணவனாக இருந்து என்னை செம்மைப்படுத்திய வழிநடத்திய அதிபராக திகழ்கின்றார்.
அதிபர் அவர்களின்ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.
உங்களின் விருட்சத்தில் விழுது விட்டவனாய்…
விழிநீர் அஞ்சலிகளுடன்…
சு.தியாகராஜ்
ஆசிரியர்

