(செ.திவாகரன் நானுஓயா )
நுவரெலிய தபால் நிலையம் அமைந்துள்ள இடத்தை இலங்கையின் முன்னணி சுற்றுலா விடுதிகளில் ஒன்றான தாஜ் சமுத்திராவினால், சுற்றுலா விடுதியொன்றை நிர்மாணிப்பதற்காகவழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிப்பு
இலங்கையில் நுவரெலியா நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் இலங்கையின் மிகவும் துடிப்பான இடங்களில் ஒன்றாகும். பொதுவாக நுவரெலியாவை குட்டி இங்கிலாந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியா நகரத்தின் வரலாறு 1818 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது நுவரெலியாவில் பசுமையான மற்றும் அமைதியான காலநிலையைக் கழிக்க முடியும். உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுவதற்கு நுவரெலியா முக்கிய இடத்தை வகிக்கிறது இதில் தபால் நிலையம் சிறந்த இடமாகும். அதிகமான சுற்றுலா பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களில் நுவரெலியாவை ஒன்றாக தேர்வு செய்வதற்கு தபால் நிலையம் ஒர் காரணமாகும்
விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நுவரெலியா நகருக்கு படையெடுத்து வரும் நிலையில் குறித்த சுற்றுலாப் பயணிகளால் அழகிய இயற்கை சுற்றுச்சூழல் நடுவில் அமைந்துள்ள பிரதான தபால் நிலையம் அழிவை எதிர்நோக்கி வருகின்றமை அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.
நுவரெலியா பிரதான தபால் நிலைய கட்டிடம் 1894 ஆண்டு ஆங்கிலேரால் அமைக்கப்பட்டக் கட்டிடமாகும் இங்கிலாந்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அமைப்பைப் பின்பற்றியதாக அமைக்கப்பட்டுள்ளது இதன் ஒரு புறத்தில் 40 அடி உயர மணிக்கூண்டு ஒன்றும் பித்தளை மற்றும் உருக்கினால் அமைக்கப்பட்டு காணப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யபட்ட கட்டிட மூலப்பொருட்களைக் கொண்டே இவ்வழகிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது இக் கட்டடத்துக்கான மர வேலைகளுக்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு பலகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்திய நாட்டின் பெங்களுரு நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட கூரை ஓடுகளே பயன்படுத்தப்பட்டுள்ளது . நுவரெலியாவை பல்வேறு காலகட்டங்களில், அழகிய நகராக உருவாக்கியதில் ஆளுநர்களான சேர்.வில்லியம் ஹோர்டன், சேர் வில்லியம் கிரகரி, ஆய்வாளர் சாமுவேல் பேக்கர் ஆகியோரின் பணிகள் முக்கியமானது.
உலக தபால் சேவையின் 175 வருட கொண்டாட்டம் 1990இல் இலங்கையில் நிகழ்ந்தபோது அதன் ஞாபகார்த்தமாக அரசாங்கம் ஒரு பத்துரூபா தபால் முத்திரையை வெளியிட்டிருந்தது. அம் முத்திரையில் இக் கட்டிடத்தின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்தது இருந்தும் 123 வருடங்களுக்கு மேலாக அமைக்கப்பட்ட கடிகாரம் பழுதடைந்து காணப்படுகிறது .
நுவரெலியாவிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் தபால் பொதிகள் (பார்சல்) காசு கட்டளைகள் தந்திகள் அனுப்புவதற்காகவே ஆங்கிலேயரால் இத் தபாலகம் அமைக்கப்பட்டது. அதாவது, ஒரிஜினலாகவே இது தபாலகத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த தபாலகத்தை வடிவமைத்தவரின் பெயர் டியுடர் எட்வர்டியன். இவர் ஒரு ஆங்கிலேயர். நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இந்த தபாலகக் கட்டிடம் ஒரு அடையாளச் சின்னமாக இருப்பதால் இதைப் புகைப்படமெடுக்காமல் இவர்கள் திரும்பிச் செல்வதில்லை. தற்போது அதிகமான திருமண வைபவத்திற்காக முன் படப்பிடிப்பு செய்வதற்கு இவ் கட்டிடத்தின் முன் இருந்து புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர் அத்தோடு நுவரெலியா நகரிற்கு பிரதானமான கட்டிடமாக இத்தபால் நிலையம் அமைந்துள்ளது.
இந்தத் தபாலகத்தை சுற்றுலா விடுதி ஒன்றினை அமைப்பதற்காக இந்தியாவை தளமாகக்கொண்டு உலகெங்கும் இயங்கி வரும் ” தாஜ் சமுத்திரா ” சுற்றுலா நிறுவனமொன்றுக்கு கையளிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்தே நுவரெலியா வாழ் பொதுமக்களும், இத் தபால் காரியாலயத்தில் தொழில் புரியும் ஊழியர்களும் வன்மையான தமது எதிர்ப்பையும் . போராட்டங்களையும் நடத்தி தமது எதிர்ப்பினை சுமார் ஆறு வருடங்களுக்கு முன் தெரிவித்து வந்தனர் அத்துடன் தபால் நிலைய ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டனர் இருந்தும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் “பந்துல குணவர்தன” இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தினார். நுவரெலியா நகர தபால் நிலையம் மாத்திரமின்றி கண்டி நகர் தபால் நிலைய கட்டிடமும் இவ்வாறு சுற்றுலா விடுதியாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது மேலும் நுவரெலியாவிலுள்ள குறித்த தபால் நிலையம் தொடர்ந்து பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது , தற்போதைய பொருளாதார நிலைமைகளுடன் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது முடியாத காரியம் எனவும் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார் எனினும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நானும் இந்த யோசனையை வரவேற்கின்றேன் எனவும் அமைச்சர் “பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே இக் கட்டிடத்தை வெளிநாட்டு ஹோட்டல் நிறுவனத்திடம் கையளிப்பதை தபால்துறை ஊழியர்களும் அதிகாரிகளும் விரும்பமாட்டார்கள். எங்களுக்குரிய பழம்பெரும் கட்டடங்களை நாங்களே பாதுகாப்போம், பராமரிப்போம், அவற்றை எமது பணியிடங்களாகவே வைத்திருப்போம் என்பது அவர்களின் நிலைப்பாடாக அமைந்துள்ளது
கடந்த வாரம் ஆரம்பத்தில் தபால்மா அதிபரால் குறித்த கட்டிடமானது புதிய முதலீட்டுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு தபால் நிலைய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கினர். 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 48 மணித்தியால வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவித்திருந்தார். இதில் நுவரெலியாவிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரும் தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது
எனவே சுற்றுலாத் தளங்களின் ஒன்றாக காணப்படும் தபால் நிலையத்தினை அழகை நாம் மட்டும் கண்டுகளிக்காமல் அதன் பயனை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்கும் வகையில் பாதுகாப்பு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை இலங்கையின் முதன்மை சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனமான தாஜ் சமுத்திரா சுற்றுலா விடுதிக்கு ஒப்படைக்க சோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்
இதற்கு பலரும் தொடர்ந்து எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.
இத்தபால் நிலைய கட்டிடம் சுற்றுலா விடுதியாக மாறப்போகின்றது என்ற தகவல்கள் கசிந்ததும் அதற்கு எதிராக இலங்கையில் அனைத்து பகுதிகளிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது
பழமையான கட்டிடத்தினை பாதுகாக்க இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் மாதம் (09) ஆம் திகதி நுவரெலியா பிரதான தபால் நிலையத்னை சுற்றி கருப்பு கொடி கட்டி தபால் நிலையத்திற்கு முன்பாக தபால் ஊழியர்களும் பொது மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதன் போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறும் , கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தில் இலங்கை தபால் அதிகாரி சங்கம் , இலங்கை தபால் ஊழியர்கள் சங்கம் அகில இலங்கை தபால் தந்தி ஊழியர்கள் சங்கம் மற்றும் தபால் மற்றும் தொலைத்தொடர்பு சங்கங்கள் இணைந்து கொண்டனர்.
எனவே சுற்றுலாத் தளங்களின் ஒன்றாக காணப்படும் தபால் நிலையத்தினை அழகை நாம் மட்டும் கண்டுகளிக்காமல் அதன் பயனை எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்கும் வகையில் பாதுகாப்பு செய்ய வேண்டும் என்பது அனைவராலும் எதிர்ப்பாக்கப்படுகின்றது.
