இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த கொவிட் பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது நாட்டில் மீண்டும் பரவ ஆரம்பித்திருக்கும் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் நாடுமுழுவதுமுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார்.
தட்டம்மை நோயை ஒழித்துள்ள நாடாக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையை அடையாளங்கண்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் சுமார் 700 அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது.
சில காரணங்களால், தட்டம்மை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவாக உள்ளதால் தற்போது நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நிலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
அதன்படி, ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக நோய்த்தடுப்பு தடுப்பூசியை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தட்டம்மை நோயை தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பேற்றோரை கேட்டுக் கொள்கிறோம்.
இது தவிர, இந்தியாவில் பதிவாகிவரும் புதிய JN1 கொவிட் பிறழ்வு குறித்து இந்நாட்களில் எமது நாட்டிலும் கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது. தற்போது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளபடி, இது தொடர்பாக தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். JN1 கொவிட் பிறழ்வு குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன், இது தொடர்பாக மாதிரி சோதனைகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இந்தியாவில் பதிவாகியுள்ள புதிய கொவிட் பிறழ்வு கொண்ட நோயாளிகள் யாரும் பதிவாகவில்லை. ஆனால் கடந்த கொவிட் காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.” என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண மேலும் தெரிவித்தார்.
