பசறை எல்டப் கிகிரிவத்தை 18ஆவது லயன் குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள மரத்தாலான மின்கம்பம் முறிந்து விழும் பாரிய அபாயகரமான சூழ்நிலையில் காணப்படுவதாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக கடிதம் மூலமாக பசறை மின்சார சபை காரியாலயத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பல தடவைகள் நேரில் சென்று இலங்கை மின்சார சபை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் ஆனால் மின்கம்பத்தை மாற்றுவதற்கான எதுவித நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தற்போது பெய்து வரும் கடும் மழையின் காரணமாக குறித்த மின்கம்பம் முறிந்து வீழ்வதற்கான பாரிய அபாயகரமான சூழல் காணப்படுவதாகவும் முறிந்து விழுந்தால் லயன் குடியிருப்பின் மீதே விழும் எனவும் மக்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டும் பதுளை மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தம்மை பார்த்து வாக்குகளை பெற்று செல்வதாகவும் ஏதாவது ஒரு அனர்த்தம் ஏற்பட்டால் அவ்விடத்திற்கு யார் முதலில் வருவது என போட்டியுடன், வந்து அவ்விடத்தில் பார்வையிட்டு விட்டு வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசி விட்டு செல்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பாக மலையக அரசியல் வாதிகள் சற்று கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட மின்சார சபை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து குறித்த மின்கம்பத்தை மாற்றி தர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது சம்பந்தமாக நாம் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஷின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது உடனடியாக மின்சார சபை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து உடன் குறித்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ராமு தனராஜா



