சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக இலங்கையிலிருந்து சென்னை சென்றவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.
மூன்று பெண்கள் உட்பட 15 பேர் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளானதில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 15 பேரும் மதுரை மாவட்டம் தவுடு சந்து பகுதியை சேர்ந்த மேகநாதன் தினேஷ்குமார் (30) என்பவரின் வேனில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (12)அதிகாலை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா விஜயகோபாலபுரம் என்ற இடத்தில் சென்ற போது வேன் திடீரென வேகக்கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து சாரதி பிரயத்தனம் மேற்கொண்டு வேனை வீதியோரமாக நிறுத்தி பழுது பார்த்துக்கொண்டிருந்த போது பின்னால் வந்த மற்றொரு வேன் சாரதியும் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்னை வேன் சாரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் சென்னையில் இருந்து கம்பத்தை நோக்கி சென்ற தனியார் பேருந்து முன்னால் நின்ற சென்னை வேனில் மோதியது.
மோதியதில் வேனில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 13 பேரும், வேன் சாரதி மற்றும் பேருந்து சாரதி உள்ளிட்ட 15 நபர்கள் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக 108 நோயாளர் காவு வாகனம் மூலமாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பாடாலூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
