கண்டி, மடுல்கலை – கலாபொக்க பகுதிக்கு ஜீவன் தொண்டமான் பயணம் மேற்கொண்டு பாடசாலை சமூகத்தினர் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அரச பெருந்தோட்டயாக்கம் தனியார் மயப்படுத்தப்பட யோசனைகள் முன்வைக்கப்பட உள்ள நிலையில் சில வங்குரோத்து அரசியல்வாதிகள் போலியான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளனர். இதனால் மக்கள் இடையே வீண் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
எனவே, மக்களை சந்தித்து இது பற்றி தெளிவுபடுத்தினார். அரச பெருந்தோட்டயாக்கம் தொழிலாளர்களுக்குரிய 2 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான கொடுப்பனவுகளை செலுத்த வேண்டியுள்ளன.
எனவே, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைகால கொடுப்பனவு உட்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து வித கொடுப்பனவுகளும் செலுத்தபடவேண்டும், அதுவரை தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, அதற்கு உடன்படவும் மாட்டோம் என மக்களிடம் உறுதியாக கூறினார்.
அத்துடன், வீடமைப்பதற்கான நிலம், விவசாய நிலம் என்பனவற்றையும் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக உள்ளோம். எனவே, ஒரு சில வங்குரோத்து அரசியல் வாதிகளால் கூக்குரலிட்டு கடந்த காலத்தைப் போல மக்களை ஏமாற்ற எத்தணிக்க முடியுமே தவிர ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு எதுவும் சாதித்தது கிடையாது.
கலாபொக்க அபிராமி வித்தியாலயத்தின் பல ஆண்டுகளாக கோரிக்கையாக இருந்த 2 ஏக்கர் காணி என்ற கோரிக்கையை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்தார். அளவீட்டு பணி தொடர்பான ஆவணங்களை கையளித்தார்.
இதன் போது இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியும், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இ.தொ.காவின் தோட்ட கமிட்டி தலைவர்கள், மாவட்டத் தலைவர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
மடுல்கலை நிருபர்

