உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
“புதுப்பானையில் பொங்கல் பொங்கும் வேளையில் “பொங்கலோ பொங்கல்” என்று அனைவரும் மகிழ்ந்து குரலெழுப்பி தத்தமது வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்துகின்ற பொங்கல் பண்டிகையானது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகும். உழவர்களினதும் உழைப்பாளர்களினதும் உன்னத பணிக்கு உறுதுணை புரிகின்ற சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த நன்னாளில் நாம் அனைவரும் நன்றியின் மகத்துவத்தினை உணரவைக்கும் திருநாளாக இந்தப் பொங்கல் பண்டிகை
அமைகின்றது.
“தைத் திங்கள் தண்கயம் போல அள்ள அள்ள குறையாத செல்வங்கள்” இந்தத் திருநாளைத் தொடர்ந்து கிடைக்க வேண்டும். “தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள் இந்த நன்மொழிக்கேற்ப உடல் உள ரீதியாக உழைக்கின்ற உழைப்பாளிகளின் வாழ்விலும் நல்வாழ்விற்கான வழிகள் பிறக்க வேண்டும்.
உலகத்திலே உழவுத் தொழிலைச் செய்யாது பலர் பல்வேறு தொழில்களைச் செய்தாலும் அந்தத் தொழிலுக்கெல்லாம் உழவுத் தொழிலே பிரதானமான தொழில் என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். ஏனெனின் உழவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நாமனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்.
இத்தகைய உழவர்கள் முதல் ஏனைய தொழிலார்கள் வரை அனைவரின் வாழ்விலும் இந்தத் தைத்திருநாள் வளத்தினைப் பெற்றுத்தரட்டும். இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்.இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் என்று கூறி வாழ்த்துகின்றேன்.”என்று தெரிவித்துள்ளார்.
