இலங்கை மின்சார சபையைக் (CEB) கலைப்பதற்கான தீர்மானத்தை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் அதனைப் பல நிறுவனங்களாகப் பிரிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான 8 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து 24 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தன.
கடந்த ஒரு மாத காலமாகத் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து முறையான பதில் கிடைக்காத நிலையில், நேற்று (பெப்ரவரி 09) அமைச்சருக்கு மற்றுமொரு அவசரக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 24 தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கையொப்பமிட்டுள்ளனர்.
மின்சார சபையைக் கலைப்பதற்கான திகதி வர்த்தமானி மூலம் வெளியிடப்படுவதற்கு முன்னர் ஊழியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் வர்த்தமானி வெளியிடப்பட்டால், பொதுமக்களுக்கோ அரசாங்கத்திற்கோ எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படாமல் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளதால், ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சார சபையின் பொறியியலாளர்கள் முதல் தொழில்நுட்ப அதிகாரிகள் வரை அனைவரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதால், நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
அரசாங்கம் இந்த எச்சரிக்கை குறித்து எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
