வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி, ஒரு பரஸ்பர (Mutual Decision) முடிவு எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தொலைபேசி வாயிலாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் இதழுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இருவரும் இது குறித்து ஆலோசித்து வருகிறோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். போரின் கால அளவு குறித்து தற்போது எந்தவொரு காலக்கெடுவையும் அவர் விதிக்கவில்லை.
அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தினால், இஸ்ரேல் மட்டும் போரைத் தொடர முடியுமா என்ற கேள்விக்கு, “அத்தகைய சூழல் உருவாக வாய்ப்பில்லை. அதற்கான அவசியம் ஏற்படும் என்றும் நான் நினைக்கவில்லை” என பதிலளித்தார்.
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” எனக் கூறி விரிவான கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
முன்னதாக ஏபிசி நியூஸ் (ABC News) தளத்திற்கு அளித்த பேட்டியில், கமேனியின் மகனான மொஜ்தபாவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அமெரிக்காவின் ஆதரவின்றி நியமிக்கப்படும் எந்தவொரு தலைவரும் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது “எபிக் பியூரி” (Operation Epic Fury) என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் இந்த ராணுவ நடவடிக்கை, பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
