2019 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் சேவை (SLPS) நியமனங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டு, நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வரும் ஆசிரியர்கள், தமக்கான நீதியைக் கோரி போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளனர். அரசின் தொடர்ச்சியான இழுத்தடிப்புப் போக்குகளுக்கு மத்தியில், இன்று நாடு முழுவதிலுமிருந்து ஜனாதிபதிக்கு 100க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைத் தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, நேர்முகத் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்துத் தகுதிகளையும் பூர்த்தி செய்த போதிலும், அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களால் இவர்களுக்கான நியமனங்கள் பல கட்டங்களாகத் தாமதப்படுத்தப்பட்டு வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும், நிர்வாக ரீதியான தீர்வை விரைவுபடுத்தக் கோரி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இந்த பாரிய தபால் வழிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் கையொப்பத்துடன் கூடிய இந்த மகஜர்கள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தகுதியிருந்தும் நியமனம் மறுக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பாதிப்புகளையும் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்த போராட்டக் குழுவினர்,
“பல வருடங்களாக நிலவி வரும் இந்த இழுத்தடிப்புக்கு ஜனாதிபதி அவர்கள் நேரடியாகத் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமனங்களை வழங்கி, கல்வித் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப முன்வர வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிப்பதோடு, ஜனாதிபதியின் துரித தீர்வை எதிர்பார்த்து இந்த ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை தமது ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் தொடரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
