நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 86 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரொக்வூட் தோட்டத்தில் நேற்று (ஏப்ரல் 20) இரவு 7 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரொக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த கந்தன் ஆண்டி (86 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் 2 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்தது. இதன் போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளான முதியவர் படுகாயமடைந்த நிலையில், ‘1990’ அவசர ஆம்புலன்ஸ் சேவை மூலம் உடனடியாக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
