பலாங்கொடையில் பாடசாலை பேருந்து விபத்து: 34 மாணவர்கள் காயம்.
பலாங்கொடை – பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 34 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 8.45 மணியளவில் பலாங்கொடைக்கும் பொகவந்தலாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற போதே எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 34 மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 5 மாணவர்களின் நிலைமை சற்று கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனைய மாணவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவ பொலிஸார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
தகவல்: மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்
