பேராதனை பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அந்தப் பல்கலைக்கழகத்தின் செனட் சபைக்கு (Senate) உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்னவிடம் (W.A. Tilakaratne), முதுதத்துவமாணி (M.Phil) பட்டத்தைப் பயின்று வந்த இரண்டாம் தர விரிவுரையாளரான டாக்டர் உதாரி அபேசிங்கவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமக்கு பேராசிரியர் அவ்வப்போது பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முதலாவது பிரதிவாதியான பேராசிரியர் டபிள்யூ.ஏ. திலகரத்ன, பல்கலைக்கழகக் கட்டமைப்பிலோ அல்லது நாட்டின் ஏதேனும் உயர்கல்வி நிறுவனங்களிலோ இனிவரும் காலங்களில் எந்தவொரு கௌரவப் பதவியையும் அல்லது அதிகாரப்பூர்வப் பதவியையும் வகிக்க முடியாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பான முறையான உத்தரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் (UGC) நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தினுள் இவ்வாறான சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய, முறையான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை செனட் சபை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.
நீதியரசர்களான ஜனக் டி சில்வா, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது. குறித்த பேராசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழக உள்ளக விசாரணையில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், குற்றச்சாட்டுகள் உறுதியான பின்னரும் பேராதனை பல்கலைக்கழக செனட் சபை அவருக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நீதியரசர் ஜனக் டி சில்வா தனது தீர்ப்பில் வன்மையாகச் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்திய இந்தத் தீர்ப்பு, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
